இந்தியாவிலிருந்து 2015 ம் ஆண்டில் 4,000 பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு பணக்காரர்கள் வெளியேறும் நாடுகளில் பட்டியலில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.
நியூ வேல்ர்டு வெல்த் என்கிற இந்த அறிக்கையின்படி உலக அளவில் நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் எண்ணிக்கை பிரான்ஸில் அதிகமாக உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 10,000 பெரும் பணக்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இப்படி இடம் பெயரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 6.6 கோடி என்று ஆகும்.
மிகப் பெரிய பணக்காரர்கள் இடம்பெயர்வது குறித்து சீனா, இந்தியா கவலைப்படவில்லை என்றும் ஆய்வு கூறியுள்ளது. இவ்வாறு வெளியேறுவது உலக அளவில் இருந்தாலும் இந்தியா சீனா நாடுகளில் நிலைமை கவலைப்படும்படி உள்ளது. இந்த நாடுகளில் அதிக பணக்காரர்கள் உருவாகும் அதே வேளையில் வெளியேறுவதும் அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் தொடர்ந்து வாழ்வதற்கான நிலைமைகள் மேம்படும்பட்சத்தில் வெளியேறிய பணக்காரர்கள் திரும்ப வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
இந்த பட்டியலில் பிரான்ஸுக்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிலிருந்து 9,000 பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இத்தாலியிலிருந்து 6,000 பணக்கார்கள் வெளியேறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் நகரங்களைத்தவிர இதர பகுதிகளில் நிலவும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதம் சார்ந்த பதற்றங்கள் காரணமாக அதிக பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இந்த பதற்றம் அடுத்த பத்தாண்டுகளில் அதிகமாக எதிரொலிக்கும் என்றும் அதனால் பணக்காரர்கள் இடம்பெயர்வது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. இதர ஐரோப்பிய நாடுகளில் இப்படியான மதம் சார்ந்த பதற்றங்கள் உருவாகும் நிலைமைகள் உள்ளதால் பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகள் உருவாகும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இதர நாடுகளைப் பொறுத்த வரையில் கிரீஸில் 3,000 பணக்காரர்களும், ரஷிய குடியரசு, ஸ்பெயின் மற்றும் பிரேசில் நாடுகளில் 2,000 பணக்காரர்களும் வெளியேறுகின்றனர்.
பணக்காரர்கள் சென்று வசிக்க விரும்பும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கு 8,000 மிகப் பெரிய பணக்காரர்கள் வந்துள்ளனர். அதற்கடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 7,000 பணக்காரர்கள் சென்றுள் ளனர். கனடாவுக்கு 5,000 பணக் காரர்கள் சென்றுள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.