பல முக்கியமான நபர்கள் விவசாயத்தின் மூலம் வந்த வருமானம் என்று கூறி வரி செலுத்த வேண்டிய வருமானத்தை மறைத்துள்ளார்கள் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேளாண் வருவாய் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகும்.
இதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மேலும் அவர்கள் பெயர்கள் வெளிவந்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிவிடாதீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய ஜனதா தளம், மற்றும் பகுஜன் சமாஜ்வதி கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் விவசாயத்தின் மூலம் வந்த வருமானம் என்று சொல்லி வரி செலுத்தாமல் இருந்துள்ளதால் மிகப் பெரிய அளவுக்கு கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த ஜேட்லி, வருமான வரிச் சட்டத்தை தவறாக யாரேனும் பயன்படுத்தியிருந்தால் வருமான வரித்துறையினரால் விசாரணை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் பல முக்கியஸ்தர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் பெயர் வெளிவந்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறவேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் இது பற்றி கூற அருண் ஜேட்லி மறுத்துவிட்டார். இருந்த போதிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த நபர்களின் பெயர்களை கூறவேண்டும் என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெயர்களை வெளியிட வேண்டும். இதனால் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அருண் ஜேட்லி, நாட்டில் தற்போதுள்ள வேளாண்மை சூழ்நிலையில் விவசாய வருமானத்திற்கு வருமான வரி விதிக்க வேண்டும் என்று எந்த ஒரு முன்மொழிதலும் இல்லை என்று தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், விவசாய வருமானம் என்று சொல்லி ரூ.2,000 லட்சம் கோடி மறைத்துள்ளார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பிரச்சினை பற்றி அரசு விளக்க அளிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி, விவசாய வருமானம் என்ற பெயரில் கருப்புப் பணம் உருவாவது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும். மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.