வணிகம்

ஐபிஓ வெளியிட டாடா ஸ்கை திட்டம்

செய்திப்பிரிவு

டாடா ஸ்கை நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியிடும் (ஐபிஓ) பணியை டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி தொடங்கி இருக்கிறார். பொதுப்பங்கு வெளியீடு மூலம் 2,000 கோடி ரூபாயை திரட்ட டாடா ஸ்கை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. டாடா குழுமத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்படும் ஐபிஓ இதுவாகும்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதன் பிறகு டாடா குழுமத்தில் இருந்து எந்த ஐபிஓவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாடா ஸ்கை பட்டியலிடும் பட்சத்தில் டாடா குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் 30-வது நிறுவனமாகும்.

டாடா ஸ்கை நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் 51 சதவீத பங்குகளும், ராபர்ட் முர்டாக்கின் 21 செஞ்சுரி பாக்ஸ் 30 சதவீதமும், சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக் 10 சதவீதமும், டாடா ஆப்பர்சூனிட்டீஸ் பண்ட் 9 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. அடுத்த வாரம் தொடக்கத்தில் முதலீட்டாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் ஐபிஓ வெளியிடுவது குறித்த நடவடிக்கையை வேகப்படுத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா சன்ஸ் மற்றும் டெமாசெக் ஆகியவை தங்களிடம் உள்ள பங்குகளை கணிசமாக விற்க முடிவெடுத்திருக்கின்றன. அதே சமயம் ராபர்ட் முர்டாக் முதலீட்டை தொடர்வதாகவும், டாடா ஆப்பர்சூனிட்டீஸ் பண்ட் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் லாப பாதைக்கு திரும்பும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 267 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்தது.

SCROLL FOR NEXT