முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத்துக்காக மத்திய அரசின் 18 துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை ஒரே இடத்தில் பெற ஏதுவாக தேசிய ஒற்றை சாளர அமைப்பை பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றை சாளர அமைப்பை தொடங்கி வைத்து பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
ஒப்புதல்கள் மற்றும் பதிவுகளுக்காக அரசு அலுவலகங்களை நோக்கி ஓடுவதில் இருந்து தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு நிம்மதி வழங்கியுள்ளது. தேசிய ஒற்றைச் சாளர அமைப்பைத் தொடங்குவது என்பது இந்தியாவை தற்சார்பாக்குவதற்கான ஒரு மிகப்பெரிய நடவடிக்கை ஆகும்.
முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும் . 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்த தளம் தற்போது வழங்கி வருகிறது. இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.
அனைத்து தீர்வுகளும் முழுமையாகவும் எளிதாகவும் இத்தளத்தில் கிடைக்கும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை சூழலியலில் இது கொண்டுவரும்.
அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். விண்ணப்பிக்க, கண்காணிக்க மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க விண்ணப்பதாரர் ‘டாஷ்போர்டு’ இருக்கும்.
உங்கள் ஒப்புதல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் (KYA), பொது பதிவு, மாநில பதிவு படிவம், ஆவண களஞ்சியம் மற்றும் இ-தகவல் தொடர்பு உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கும்.
தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளை மையமாக வைத்து தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.