வணிகம்

`நிதி சீரமைப்பு கடுமையாக்கப்படும்’

செய்திப்பிரிவு

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி சீரமைப்பு கடுமையாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

பாதுகாப்பு அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஜேட்லி, இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் வந்துள்ளார். எல்லையில் நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது. இத்தகைய சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நிதி சீரமைப்பு கடுமையாக்கப்படும். பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தபோது அதன் பலனை அனுபவித்தோம். குறையும்போது அதற்காக எடுக்கப்படும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பொருளாதார மீட்சிக்கு இத்தகை நடவடிக்கை அவசியமானது என்று குறிப்பிட்டார்.

நிதி சீர்கேடுகள் தொடர அனுமதித்தால் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டினார். இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது மிகவும் சவாலானது. எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பட்ஜெட் அறிவிப்புகளை இப்போதே நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று ஜேட்லி கேட்டார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டின் பணவீக்கமும் அதிகமாக உள்ளது. வரி வருவாயும் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

SCROLL FOR NEXT