இந்திய சேவைத்துறை செயல்பாடு 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி மாதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று நிக்கி இந்தியா வெளியிட்டுள்ள பிஎம்ஐ குறியீட்டு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய சேவைத்துறை குறியீடு ஜனவரி மாதம் 54.3 ஆக இருந்தது. நிக்கி தொழில் செயல்பாட்டு புள்ளி விவரங்களில் இது தெரிய வந்துள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 53.6 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் கடந்த ஏழு மாதங்களாக சேவைத் துறை வளர்ச்சி நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களில் கடந்த ஜனவரி மாதம் சேவைத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சென்னை மழையால் பாதிக்கப்பட்டிருந்த உற்பத்தி துறை பழைய நிலைக்கு திரும்பியதையொட்டி இந்திய பொருளாதாரம் ஜனவரி மாதத்திலிருந்து வளர்ச்சி பாதையை நோக்கி மாறியுள்ளது. இந்த வளர்ச்சி, நீண்ட காலமாக மந்த நிலையிலேயே நீடிக்கும் தொழிலாளர்கள் தேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மேலும் புதிய தொழில்கள் தொடங்குவதும் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தனியார் துறை வளரும்
இது தனியார் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்று நிதித் தகவல் மற்றும் சேவை நிறுவனமான மார்கிட் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் பாலியானா டி லிமா தெரிவித்துள்ளார். மேலும் நிக்கி இந்தியா வெளியிட்டுள்ள பிஎம்ஐ குறியீடு ஆய்வில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை ஆகிய இரண்டும் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் ஜனவரி மாதம் 53.3 புள்ளிகள் என்கிற அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 51.6 புள்ளிகளோடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி தொடரவேண்டும்
இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள பலரும், வளர்ச்சி அதிகரித்துள்ளது பற்றி நேர்மறையான கருத்துகளையே கூறியுள்ளனர். அடுத்தகட்ட வளர்ச்சி தேவை என்றும், அரசின் சாதகமான தொழில் கொள்கைகள் பொறுத்தே இது அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடமும் சேவைத்துறை வளர்ச்சி தொடரும் என சேவைத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள்படி மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் சில்லரை பணவீக்கம் உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் -0.73 சதவீதமும், சில்லரை பணவீக்கம் 5.61 சதவீதமாகவும் இருந்து வருகிறது.