ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா தெரிவித்தார்.
தற்போது ரூ.5 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயரை வெளியிட விதிமுறை அனுமதிக்கிறது. இந்த வரம்பை ரூ. 1 கோடியாகக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியுள்ளார்.
இது தவிர 18 வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் வைத்துள்ள வரி பாக்கித் தொகை ரூ. 1,152 கோடியாகும்.
வரி செலுத்தாதவர்கள் பட்டிய லில் அதிகபட்சமாக ரூ.779.04 கோடி நிலுவை வைத்திருந்த உதய் எம் ஆச்சர்யா இறந்துவிட்டார் என்பதும் முக்கியமானது.
இதற்கடுத்து நெக்ஸோப்ட் இன்போடெல் நிறுவனம் ரூ.68.21 கோடி, லிவர்பூல் ரீடெய்ல் இந்தியா நிறுவனம் ரூ.32.16 கோடி, ஜஷுபாய் ஜூவல்லர்ஸ் ரூ.32.13 கோடி வரி பாக்கி வைத்துள்ளன.
மேலும் பிரஃபுல் எம் அஹானி ரூ.29.11 கோடி, சாக்ஷி எக்ஸ்போர்ட்ஸ் ரூ.26.76 கோடி, ஹேமங் சி.ஷா ரூ.22.51 கோடி, மொகித் ஹாஜி அலியாஸ் யூஸூப் மோட்டோர்வாலா ரூ.22.34 கோடி, தர்னேந்திரா ஓவர்சீஸ் நிறுவனம் ரூ.19.87 கோடி, ஜக் ஹீட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.18.45 கோடி வரி பாக்கி வைத்துள்ளன.
வரி நிலுவை வைத்துள்ள நிறுவனங்களிடமிருந்து, அவற்றை வசூலிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சின்ஹா குறிப்பிட்டார்.