பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து முகேஷ் பன்சால் விலகி இருக்கிறார். மிந்திரா நிறுவனத்தை நிறுவியவர் முகேஷ் பன்சால். மிந்திரா நிறுவனத்தை பிளிப்கார்ட் வாங்கிய போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் முகேஷ் முக்கிய பொறுப்பில் இணைந்தார். இப்போது அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் தலைமையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இருந்த பின்னி பன்சால் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டார். அதேபோல தலைமைச் செயல் அதிகாரியாக இந்த சச்சின் பன்சால் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முகேஷ் பன்சால் விலகல் கவனிக்கத்தக்கது. இருந்தாலும் நிறுவனத்தின் ஆலோசகராக முகேஷ் தொடருவார் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அதேபோல தலைமை வணிக அலுவலராக இருந்த அங்கிட் நகோரி விலகி இருக்கிறார். இவர் விளையாட்டுத் துறையில் புதிய நிறுவனம் தொடங்க இருப்பதால் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மதிப்புமிக்க செயல்பாடுகளுக்கு பிளிப்கார்ட் நன்றி தெரிவித்துகொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது.
மிந்திரா நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2014-ம் ஆண்டு மிந்திரா நிறுவனத்தை 37 கோடி டாலர் கொடுத்து பிளிப்கார்ட் வாங்கியது.
பிளிப்கார்ட் மற்றும் மிந்திரா நிறுவனத்தில் எனது பயணம் முடிவுக்கு வந்தது. கடந்த 9 வருடங்களாக பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஆனந்த் நாராயனண் தலைமையிலான புதிய குழு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிளிப்கார்ட் இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது. அடுத்த கட்டத்துக்கு இந்த நிறுவனம் செல்லும்.
நிறுவனத்தில் இருந்து விலகி இருந்தாலும் ஆலோசகராக இந்த நிறுவனத்தில் எனது பயணம் தொடரும். நிறைய படிக்க, குழந்தைகளுடன் நேரம் செலவிட, பயணம் செய்ய எனக்கு நீண்ட இடைவெளி தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் நான் இழந்த மகிழ்ச்சியை அனுபவிக்க இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று முகேஷ் பன்சால் தெரிவித்திருக்கிறார்.