வரும் திங்கள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்ற சூழ்நிலையில் நாளை (சனிக்கிழமை) பொருளாதார வல்லுநர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்த இருக்கிறார். பட்ஜெட்டுக்கு முன்பு இதுபோன்ற கூட்டம் நடப்பது இது முதல் முறையாகும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் 90 நிமிடம் நடக்கும் என்று அதிகாரிகள் கூறினாலும், எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பது குறித்து விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப் படும். கடைசி நிமிடத்தில் மாறுதல் செய்வதற்காக இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அடுத்த நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை தாண்டி நிதிப்பற்றாக்குறை செல்லும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் மேம்படவில்லை. இந்த வருடம் நிதிப்பற்றாக்குறை 3.9 சதவீதமாக இருக்கும். இந்த இலக்கை மத்திய அரசு எட்டி விடும், ஆனால் அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில் நிதிப்பற்றாக் குறைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை எட்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியனும், நாளை நடக்க இருக்கும் ஆலோ சனை கூட்டத்தில் கலந்து கொண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை விவரிப்பார் என்று தெரிகிறது.