இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் ரூ.500 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் அல்லது நிறுவன கடனை திருப்பி அளிக்க சீரமைப்பு திட்டம் இல்லாதவர்கள் பட்டியலை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு அதிக சுமையை கொடுக்கக்கூடியது என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட அறிக்கையை ஆறு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி ஜிஎஸ் தாக்கர் உத்தரவிட்டுள்ளார்.
வாராக்கடன் அளவு அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளில் நிதி செயல்பாடுகள் குறைந்து வருகின்றன. எஸ்பிஐ வங்கியில் நிகர லாபம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் பிற பொதுத்துறை வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பேங்க் ஆப் இந்தியா நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் அறிக்கை படி, வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் சராசரியாக 67 சதவீதம் சரிந்துள்ளது என கூறியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது ரூ.1,259.49 கோடியாக உள்ளது. வங்கியின் வராக்கடன் அளவு ரூ.20,692 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் தங்களது கணக்கு விவரங்களை நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் சரிசெய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி கெடு வைத்துள்ளதால், எஸ்பிஐ வங்கியின் இந்த நிலைமை நடப்பு நிதி ஆண்டின் முடிவிலும் தொடர வாய்ப்புள்ளது. இதர பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் நிகர லாபமும் கடந்த காலாண்டில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு தொடர்பாக ஆர்பிஐ அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.