ஹால்மார்க் அடையாள எண்ணைபதிக்க வேண்டும் என்ற இந்திய தரநிர்ணய ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் இன்று தங்க நகை விற்பனையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
உலகில் அதிக அளவில் தங்கத்தை நுகரும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை கண்காணிப்பதற்காக 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேலான நகை விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவற்றில் 35,879 விற்பனையாளர்கள் மட்டுமே இந்திய தர நிர்ணய கழகத்தின் ஹால்மார்க் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனில்பெரும்பாலான விற்பனையாளர்கள் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
எனவே 2021 ஜனவரி 1-ம் தேதி முதல், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை செய்யப்பட்டு விற்பனை செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பாதிப்பு காரணத்தினால் தங்க நகை விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. தற்போது ஜூன் 15 முதல் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் இருக்கும் அனைத்துத் தங்க நகைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (HUID) பதிக்க வேண்டும் என்று இந்திய தரநிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிவித்திருக்கிறது. இது அமல்படுத்தப்பட்டு 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தநிலையில் ஹால்மார்க் அடையாள எண்ணைபதிக்க வேண்டும் என்ற இந்திய தரநிர்ணய ஆணையத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரி நாட்டின் பல பகுதிகளில் இன்று தங்க நகை விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அகமதாபாத், மும்பை என நாட்டில் பல முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன.
சென்னையில் அரை நாள் மட்டும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.