சென்னையை அடுத்த காட்டுப் பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டி ஷிப்யார்ட் நிறுவனம் கட்டிய முதலாவது கப்பல் வெள்ளிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனம் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
வர்த்தக ரீதியில் வடிவ மைக்கப்பட்ட இந்த கப்பல் கத்தாரைச் சேர்ந்த ஹலுல் ஆஃப்ஷோர் சர்வீசஸ் கம்பெனி நிறுவனத்துக்காகக் கட்டப்பட்டதாகும். இந்த கப்பலை இந்நிறுவனத்தின் தலைவர் அலி பின் ஜஸிம் பின் முகமது அல் தானி பெற்றுக் கொண்டார்.
78.60 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலின் மொத்த எடை 3,450 டன்னாகும். இந்த கப்பலின் பரப்பளவு 725 சதுர மீட்டராகும். பன்னோக்கு அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை தீயணைப்பு, மீட்பு, எரிவாயு சப்ளை, எண்ணெய் மீட்பு உள்ளிட்ட பல பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். டீசல் மற்றும் மின்சாரத்தில் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கடல்சார் விதிகள், சுற்றுச் சூழல் விதிமுறைகள் ஆகியவற்றுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.