வணிகம்

ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ 1.75 லட்சம் கோடி கர்நாடகாவில் முதலீடு

இரா.வினோத்

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாட‌க அரசின் ச‌ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ 1.75 லட்சம் கோடி முதலீடு குவிந்துள்ளது. இதன் மூலம் பெங்களூருவை தவிர மாநிலத்தில் உள்ள 2-ம் கட்ட நகரங்கள் வளர்ச்சி அடையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் தொழில் துறை சார்பாக சர்வதேச முதலீட் டாளர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய‌து. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி, அனந்த குமார், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச் சர்களும் பங்கேற்றனர்.

இது தவிர‌ தொழில‌திபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, சஜன் ஜிண்டால், இன்ஃபோசிஸ் நிறுவன‌ தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கொரியா, சுவீடன் ஆகிய 7 நாடு களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் நிறைவு நாளில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், ``இந்த மாநாட்டையொட்டி கர்நாடகாவில் ரூ.1லட்சத்து 75 ஆயிரத்து 633 கோடி மதிப்பில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,33,177 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் புதியதாக 6,70,931 பணியிடங்கள் உருவாகும்.

இந்த முதலீட்டில் ரூ. 1 லட்சம் கோடி சூரிய ஒளி மின்சாரம், காற் றாலை உள்ளிட்ட மின்னாற்றல் துறைக்கு வந்துள்ளது. ரூ. 38,000 ஆயிரம் கோடி கனிம வளத் துறையிலும், ரூ.24,000 கோடி ராசாயனத் துறையிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முதலீடுகளின் மூலம் கர்நாடகாவில் பின் தங்கியுள்ள 2-ம் கட்ட நகரங்களான பெல்லாரி, த‌க்ஷின கன்னடா, தும்கூரு, தார்வாட், கோலார் ஆகியவை வளர்ச்சி அடையும். எனவே அனைத்து நகரங்களும் பெங்களூரு, மைசூரு போல வளர்ச்சி அடைந்த நகரங்களாக மாறும்'' என்றார்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி முதலீடுகளை கர்நாடக அரசு எதிர்பார்த்தது. ஆனால் கடந்த முறை கிடைத்த அதே ரூ.1.33 கோடி அளவிலான முதலீடே வந்திருப்பதால், சித்தராமையா அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT