ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும், மற்ற வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 3.3 சதவிகிதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு நடப்பு நிதியாண்டு தொடங்கியபின் 2-வது முறையாக மும்பையில் கூடி விவாதித்தது.
2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஓராண்டாக வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கைக் குழு தொடர்ந்து 7-வது முறையாக வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து நமது பொருளாதாரம் வெகுவேகமாக மீண்டு வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு வேகப்படுத்தப்படுகிறது.
பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022 நிதியாண்டில் 9.5% ஆக இருக்கும். 2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
ரெப்போ என அழைக்கப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. தற்போதுள்ள 4% வட்டி விகிதமே தொடரும். அதுபோலவே ரிசர்வ் வங்கி பெறும் கடனான ரிவர்ஸ் ரெப்போவும் 3.3 சதவிகிதமாக தொடரும்.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.