வணிகம்

ரயில்வே பட்ஜெட் எதிரொலி: பங்குச் சந்தைகள் கடும் சரிவு

செய்திப்பிரிவு

ரயில்வே பட்ஜெட் முதலீட்டா ளர்களை ஊக்குவிக்காததால் நேற்றும் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் சரிந்தன. சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிந்து 22976 புள்ளியிலும், நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 6970 புள்ளியிலும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 23000 புள்ளிகளுக்கு கீழேயும், நிப்டி 7000 புள்ளிகளுக்கு கீழேயும் சரிந்துள்ளது. சீன பங்குச் சந்தையான ஷாங்காய் காம் போசிட் நேற்று 6 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாகவும் இந்திய சந்தையில் சரிவு ஏற்பட்டது.

நிப்டி 6800 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில் பங்குச்சந்தையில் மேலும் சரிவு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1.1 சதவீதம் சரிந்தது. தொடர்ந்து நான்காவது வருடமாக ரயில்வே பட்ஜெட்டின் போது பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்டல் மற்றும் ஹெல்த்கேர் துறைகளை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பங்குகளில் ஓ.என்.ஜி.சி., சன்பார்மா, ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக, எஸ்பிஐ, கெயில், டாடா மோட் டார்ஸ், எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன. புதன்கிழமை வர்த்தகத்தில் 730.99 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறியது.

ரயில்வே பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இல்லாத, அந்த துறை பங்குகள் கடுமையாக சரிந்தன. டிட்டகார் வேகன் பங்கு 9.04 சதவீதம், காளிந்தி ரயில் நிர்மானண் பங்கு 7.92 சதவீதம், டெக்ஸ்மாகோ ரயில் பங்கு 9.22 சதவீதமும் சரிந்தன. அதேபோல கட்டுமானத் தேவையை ரயில்வே பட்ஜெட் ஊக்குவிக்கவில்லை என்பதால் சிமென்ட், ஸ்டீல் துறைகளைச் சேர்ந்த பங்குகள் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சம் 8 சதவீதம் வரை சரிந்தன. ஜிண்டால் ஸ்டீல், புஷான் ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.

ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுவரை ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு 68.85 தான். இந்த மதிப்புக்கு மிக அருகே ரூபாய் வர்த்தகமாகிறது. வர்த்தகத்தின் இடையே 68.75 பைசா என்ற அளவில் ரூபாய் மதிப்பு சரிந்தது. இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று வெளிவரும் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் திங்கள் அன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டை வர்த்தகர்கள் கவனித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT