வணிகம்

வாராக்கடன் பிரச்சினை: வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சரிவு

செய்திப்பிரிவு

வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை அதிகரித்து வருவதால், வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செய்த முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 6,662 கோடி ரூபாயை வங்கி பங்குகளில் இருந்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வங்கி பங்குகளில் செய்த முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கடந்த இரு மாதத்தில் 9,000 கோடி ரூபாய் வெளியேறி உள்ளது.

சமீப காலங்களில் பொதுத் துறை வங்கிப்பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பங்குகளின் தரக்குறியீடுகள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக இது போன்ற வங்கிப்பங்குகள் மியூச்சுவல் பண்ட்கள் தங்களுடைய முதலீட்டை குறைத்து வந்தன.

இருந்தாலும் மியூச்சுவல் பண்ட் கள் செய்திருக்கும் முதலீட்டில் வங்கித்துறையே முதல் இடத்தில் இருக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கும் தொகையில் 19.24 சதவீதம் (ஜனவரி 2016) வங்கித்துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய டிசம்பர் மாத்தில் 19.97 சதவீதமாக வங்கித்துறை பங்கு இருந்தது.

டிசம்பர் மாத இறுதியில் 85,376 கோடி ரூபாய் வங்கித்துறை பங்கு களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் முதலீடு செய்திருந்தன. ஜனவரி மாதத்தில் இந்த தொகை 78,644 கோடி ரூபாயாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் 88,000 கோடி ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கித்துறையின் மொத்த வாராக்கடன் 5 சதவீதமாக இருக் கிறது. இந்த வாராக்கடன் அளவு 11 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. வங்கிப்பங்குகளுக்கு பிறகு, ஐடி துறையில் மியூச்சுவல் பண்ட்கள் அதிகமாக முதலீடு செய் திருக்கின்றன. இந்த துறையில் 43,115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பார்மா துறையில் 33,785 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறையில் 26,653 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT