வணிகம்

மத்திய பட்ஜெட்- 10. நல்ல மனம் வேண்டும்!

பாரதி பாஸ்கரன்

இரண்டு வகை இருக்கு. நமக்கு என்ன வேணும், நாம என்ன எதிர்பார்க்கறோம்... அது ஒண்ணு; இன்னொன்னு, என்னவெல்லாம் வரப் போவுது... யார்யாருக்கு என்னென்ன கிடைக்கப் போவுது..'

‘எதிர்பார்ப்புகளில் ‘முதல்ல சொன்னது மட்டும் எடுத்துப்போம். ஏன்னா, அடுத்ததைப் பத்தி என்ன சொன்னாலும் அது வெறுமனே யூகமாத்தான் இருக்கும். எப்படியும் ஒரு வாரத்துல பட்ஜெட்டு வரத்தானே போவுது... அப்பொ பார்த்துட்டாப் போவுது'. ‘நமக்கு என்ன வேணும்...? அதைப் பார்ப்போம்..'

‘ஆமாம்... பட்ஜெட்டை அச்சடிக்கக் கூட ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்பொ சொல்லி என்ன ஆவப் போவுது..?' ஊஹூம்.. அப்படி இல்லை. இப்போ சமர்ப்பிக்கப் போறது, ‘ட்ராஃப்ட்' பட்ஜெட்டுதான்.

அதாவது, அவையின் அனுமதிக்காக வைக்கப்படுற அறிக்கை'. இதுக்கு அப்புறம், அவையில விவாதம் நடந்து, உறுப்பினர்களின் கோரிக்கைகளை, ஆலோசனைகளை, திருத்தங்களைப் பரிசீலித்து, அவையின் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறதே..!' ‘அப்படியா...? இப்ப சொன்னாலும் நடக்கும்...?' ‘வாய்ப்பு இருக்கு. பார்ப்போம்.'

‘இதுவரை இத்தொடர் பயணித்த திசையில் இருந்தே, நம் எதிர்பார்ப்புகள் என்னென்னு புரிஞ்சிருக்குமே...?'

விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், குடிசை - கிராமத் தொழில் செய்வோர் நலன்தான் நமது முன்னுரிமை. இவர்களின் மிகப் பெரிய பிரச்சினையே, நிதி நெருக்கடிதான். கடனில் சிக்கித் திணறும் இவர்களுக்காக, புதிய உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்க இயலாத இவர்களுக்காக, புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள, செயல்படுத்த வசதியற்ற இவர்களுக்காக, சிறப்புக் கடன் திட்டம் - உடனடித் தேவை.

எளிய தவணை முறை, ‘உத்தரவாதம்' கேட்காத, அதிக சிக்கலில்லாத நடைமுறை (procedure) விரைவான பரிசீலனை (quick processing) போன்ற அம்சங்களுடன், வட்டியில்லாக் கடன், மிகப் பெரிய நற்செய்தியாய் இருக்கும்.

புதிய ரயில்வே வழித் தடங்களுக்கு உடனடி ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் வேண்டும்.

ஆயிரக்கணக்கான பணியிடங்களை உருவாக்கவும், பயணிகள், சரக்குப் போக்குவரத்தில் செலவைக் குறைக்கவும், ரயில்வே சேவையை விரிவுபடுத்தியே ஆக வேண்டும்.

உட்புறச் சாலை மேம்பாடும் மிக முக்கியம். மண் சாலைகள் கூடாது என்பதல்ல; பயணிக்கத் தக்கதாக இருக்கின்றனவா....? உள் நாட்டுக் கட்டமைப்பு திட்டங்கள் மட்டுமே, பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்து இருக்கும்.

நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு நன்கு பராமரிக்கப்படுதல் வேண்டும்.

அரசு, உள்ளாட்சி மன்றப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

‘என்னது....? மாநில அரசுகளின் பணிகளை எல்லாம் மத்திய பட்ஜெட்டில் செய்யச் சொன்னால் எப்படி...?' மத்திய நிதியுதவியில் மாநில அரசுகள் இவற்றைச் செய்யட்டும். ‘ஒரே இந்தியா' பொருள் உள்ளதாக இருக்கும்.

ரயில்வே இருப்புப் பாதையை ஒட்டியுள்ள, ஏராளமான காலியிடங்களில், உணவுப் பொருட்களை சேகரித்து வைக்க, சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அனுமதிக்கலாம். இடத்தின் உரிமையை ரயில்வே தக்க வைத்துக் கொண்டு, அங்கு கட்டிடம் எழுப்பும் உரிமையை, அவ்வப் பகுதி விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

கிராமப்புற, முதல் தலைமுறை பட்டதாரி இளைஞிகளுக்கு என்று அரசுப் பணிகளுக்கான சிறப்பு பணியமர்த்தல் (Special Employment Drive for First Generation Rural Girl Graduates): ஓராண்டு/ ஈராண்டு என்கிற கால நிர்ணயத்துடன், முதல் தலைமுறை பட்டதாரி இளைஞிகள் அனைவருக்கும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

சொல்லொணாத் துயரங்களுக்கு நடுவே, மிகுந்த நம்பிக்கையுடன் கல்வியைத் தொடரும் கிராமத்து இளைஞிகளுக்கு, ‘நல்ல வேலை'யை விடவும் மிகச் சிறந்த பரிசு இருக்க முடியாது.

‘படித்து முடித்தும்' வேலை கிடைக்காமல் ஊரிலேயே ‘சுத்திக் கிட்டுக் கிடக்கும்' இளைஞர்கள், நாகரிக சமுதாயத்தின் அக்கறையின்மைக்கு அடையாளம்.

இத்தகையோர் சுயமாகத் தொழில் தொடங்க, கிராமப் புற வங்கிகள், தேவையான முதலீடு வழங்கி உதவலாம்.

‘அது சரி.... இப்படி ‘வர்றவங்க போறவங்க'ளுக்கு எல்லாம் கடன் குடுத்துக் கிட்டுருந்தா, வங்கி என்ன ஆவது..?'

‘ஏற்பதற்கு இல்லை. எத்தனை எத்தனை பெரு முதலாளிகள், செல்வாக்கு படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்... வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போக்கு காட்டி வருகின்றன(ர்). அவர்களின் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும். வாராக் கடனை முறையாக வசூலித்தாலே போதும். பலருடைய நிதிப் பிரச்சினைகளை நம்மால் தீர்த்து வைக்க முடியும்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு, அனைத்து அரசுப் பள்ளி/ கல்லூரிகளிலும் ஊக்கத் தொகையுடன் கூடிய, இலவசப் பயிற்சி அளிக்கலாம்.

முன்னரே சொன்னதுதான்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ஓராண்டுக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கலாம். அவ்வந்த கிராமத்தின் பொது சுகாதாரம், குடிநீர், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘எங்க கிராமத்துக்கு இது வேணும்' என்று, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர், ‘கலெக்டரிடம்' மன்றாடிக் கொண்டு இருக்கிற நிலை மாற வேண்டும்.

‘இதை ஏன் நீங்கள் செய்து தரக் கூடாது..?' என்று மாவட்ட ஆட்சித் தலைவர்,

கிராமத்துத் தலைவரைக் கேட்கிற சூழல் வர வேண்டும். அதுதான் மெய்யான ஜனநாயகக் குடியரசு.

அடிப்படைத் தேவைகள் அன்றி, வேறு எதுவும் மானியத்திலோ இலவசமாகவோ வழங்குவதை அடியோடு தடை செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்துக் கல்வி நிலையங்களிலும், தொடக்கக் கல்வி, முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சிற்றூரிலும் பொது சுகாதார மையங்கள் (மருத்துவமனைகள்) கட்டாயம் நிறுவப்பட வேண்டும்.

ஆங்காங்கே ஆறுகளுக்குக் குறுக்கே உள்ள தரைப் பாலங்கள், மேம்பாலங் களாக உயர்த்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைகளுக்கு தரப்படும் அதே அளவு முக்கியத்துவம், நதி நீர் இணைப்புக்கும் தரப்பட வேண்டும்.

குறைந்த பட்ச நிதி ஒதுக்கீடேனும் செய்து, திட்டங்கள் முறையாகத் தொடங்கப்பட வேண்டும். கோரிக்கைகள் நிறைய. காரணம், கவனிப்பாரின்றிக் கிடக்கும் பிரச்சினைகள் நிறைய. அத்தனைக்கும் தேவையான நிதி இல்லாமல் போகலாம். ஆனால் இவையெல்லாம் செயல் திட்டத்தில் உள்ளன என்று பிரகடனப்படுத்த, விருப்பமும் தீர்க்கமான அணுகுமுறையும் போதும். சற்றே நல்ல மனமும்தான்.

நாம் கேட்பதெல்லாம் இதுதான்.

பன்னாட்டு ஒப்பந்தங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகள், போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள், பணி, ஊதிய உயர்வுகள், ‘பேங்க் ரேட்', 'ஜி.டி.பி.', வளர்ச்சி விகிதம்..... எல்லாம் இருக்கட்டும்; நடக்கட்டும்; செழிக்கட்டும்.

கிராமப் புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள். ‘தயவு செஞ்சு, ‘வேருக்கு' தண்ணி ஊத்துங்க; மரம் தானா வளரும்'.

‘நடக்குமா...?' ‘நடக்கும். நம்புவோம். இன்றோ நாளையோ அல்லது மறு நாளோ.. நிச்சயம் நிறைவேறும்'.

‘கிராமத்தை நோக்கி' பயணம் எப்போது தொடங்கப் போகிறது? தொடங்கும்.

ஒருவேளை.... தொடங்கியும் இருக்கலாம்!

நிதியாண்டு 2016-17, வளமான இனிய ஆண்டாக அமையட்டும்.

(முற்றும்)

SCROLL FOR NEXT