பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு ரூ. 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வங்கிகளின் சந்தை மதிப்பை விட 1.5 மடங்கு அளவுக்கு வாராக்கடன் நிலைமை இருக்கிறது. மாறாக தனியார் வங்கிகளின் வாராக்கடன் அந்த வங்கிகளின் சந்தை மதிப்பில் 6.6 சதவீதம் மட்டுமே உள்ளது. தனியார் வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு ரூ.46,000 கோடி ரூபாயாக இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள் தங்களது வரவு செலவு கணக்கை சரி செய்து கொள்ள ரிசர்வ் வங்கி வரும் மார்ச் 2017-ம் வரை காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக வாராக்கடன் அளவு எவ்வளவு உள்ளது, அதற்கு ஒதுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை பொதுத்துறை வங்கிகள் எடுத்துள்ளன. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் பிரமாதமாக இல்லை. பல வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன.
தற்போது பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 5 சதவீதமாக உள்ளது. வாராக்கடனாக மாறாக்கூடிய வாய்ப்புள்ளவற்றையும் சேர்க்கும் பட்சத்தில் மொத்த வாராக்கடன் அளவு 11 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 3,93,035 கோடி ரூபாயாகும். அதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பு 2,62,955 கோடி ரூபாய் மட்டுமே. ஒரு வருடத்துக்கு முன்பு இருந்த மொத்த வாராக்கடன் அளவை விட இப்போது 50 சதவீதம் அளவுக்கு வாராக்கடன் உயர்ந்திருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளை தவிர, பட்டியலிடப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பை விட வாராக்கடன் அதிகமாகும். சில வங்கிகளில் 4 முதல் 5 மடங்கு வரை சந்தை மதிப்பை விட வாராக்கடன் அதிகமாக இருக்கிறது.
தனியார் வங்கிகளை பொறுத்த வரையில் பட்டியலிடப்பட்ட 16 வங்கிகளில் வாராக்கடன் 46,271 கோடி ரூபாய். அந்த வங்கி களின் சந்தை மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். மொத்தமாக இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் 4.4 லட்சம் கோடி. வங்கிகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 9.6 லட்சம் கோடி.
ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பை விடவும் அதிகம்.
எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.72,791கோடி, பேங்க் ஆப் பரோடாவின் மொத்த வாராக்கடன் ரூ.38,934 கோடி என முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
அதேபோல தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐயின் மொத்த வாராக்கடன் அதிகமாக இருக்கிறது. இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.21,149 கோடி. வங்கிகளின் செயல்பாடு, இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹெச்.டி.எப்.சி வங்கியின் தலைவர் தீபக் பரேக் கடந்த வாரம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.