வணிகம்

வணிக நூலகம்: புதியதோர் தலைமை படைப்போம்!

பி.கிருஷ்ணகுமார்

புதிய திட்டங்களும், புதுமையான விஷயங் களை அறிந்து செயல்படுத்துதலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. நிறுவன தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதனை உணர்ந்தே செயல்பட வேண்டும். சிக்கல்களை ஆராய்வது மற்றும் புதிய திட்டங்களையும், யோசனைகளையும் வெளிப்படுத்துவது போன்ற செயல்களில் தனது குழுவினரை ஊக்கப்படுத்தும் பொறுப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு முக்கியம்.

இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற கூற்றெல்லாம், இன்றைய போட்டி மிகுந்த சூழ்நிலைக்கு சரிப்பட்டுவருமா என்பதை கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போதைய செயல்பாடு களையே இன்னும் கொஞ்சம் வேக மாக செயல்படுத்தினால் போதும், பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று நினைப்பவர்கள், வாழ முடியுமே தவிர வெற்றிகரமாக வாழ முடியுமா? என்று கேள்வியெழுப்புகிறார் “தி இன்னோவேடிவ் லீடர்” என்னும் இந்த புத்தகத்தின் ஆசிரியர். ஏனென்றால் நமது போட்டியாளர்களும் இதே மனநிலையில் இருப்பார்கள் என்பதைச் சொல்லமுடியாது. அவர்கள் நம்மை முந்திச்செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சரியான நோக்கம் வேண்டும்!

ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால் செல்லவேண்டிய இடத்தை முதலில் தெளிவாக வரை யறை செய்துகொள்ள வேண்டும் அல்லவா?. அதுபோலவே வெற்றி யடைய வேண்டுமென்றால் அதற்கான இலக்கினை சரியாக வரையறை செய்துக்கொள்ள வேண்டும். இலக்கு இல்லாத பயணம் ஒருபோதும் வெற் றியை பெற்றுத்தரப் போவதில்லை. இலக்கும், இலக்கிற்கான வழியும் தெரியாத வரை, தலைமை பொறுப் பில் உள்ளவரால் அவரது குழுவினரிட மிருந்து புதுமையான செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. நிறுவனத்தின் இலக்கினை குழுவினரிடத்தில் சரியாக கொண்டுசேர்ப்பது மேலாளரின் பணியே. இலக்கை அடைவதன் நோக்கத்தையும், இலக்கின் மீதான மதிப்பையும் அவர்களிடம் விளக்கி குழுவினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

வெறுமனே வரையப்பட்ட ஒரு ஓவியம் விரைவில் அதன் அழகினை இழந்துவிடுகின்றது. தொடர்ச்சியாக மெருகேற்றி வலுப்படுத்தும்போது மட்டுமே அதனை பொலிவுடன் வைத்திருக்க முடிகின்றது அல்லவா! அதுபோலவே, சிறந்த தலைவர்கள் தங்கள் குழுவினருடன் தேவையான நேரத்தை செலவிட்டு, நிறுவனத்தின் நோக்கம், இலக்கு, அதற்கான செயல்திட்டம் மற்றும் சவால்கள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக் கின்றனர். மேலும், நிறுவன வெற்றிக்கு பணியாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் விளக்குகின்றனர். இதன்மூலமே குழுவினரிடமிருந்து வெற்றிக்கான புதிய செயல்பாடுகளை பெறமுடிகின்றது.

பயத்தை வெல்ல வேண்டும்!

இயற்கையாகவே மாற்றத்தின் மீது நமக்கு ஒருவித அச்சம் இருக்கத்தான் செய்கின்றது. புதிதாக வரக்கூடிய மற்றும் பரிச்சையமில்லாத விஷயம் என்பதே நமது பயத்திற்கு காரணம். இந்த பயம், மாற்றத்தை ஏற்றுக்கொள்ள நம்மை சிறிது தயக்கத்திற்கு உட்படுத்துகின்றது என்பதே உண்மை. புதுமையை விரும்பும் தலைவருக்கு மாற்றத்தின் மீதான பயத்தை வெல்வது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். மாற்றத்தின் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கப்போகும் பயன்கள் பற்றி தனது குழுவினரிடையே விவாதிப்பது அவசியமான ஒன்று.

“தற்போதைய நமது செயல்பாடு நன்றாகவே உள்ளது, இதை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும்”. “புதிய மாற்றங்களில் ஆபத்துகளும் இருக்கவே செய்யும், ஆனால் நாம் மாற்றங்களுக்கு உட்படாமல் இருந்துவிட்டால் அதைவிட அதிக ஆபத்துகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும்”. இதுபோன்ற நம்பிக்கை வரிகளை நமது குழுவினர் மற்றும் நிறுவன பணியாளர்களின் மனதில் பதியவிட வேண்டும். மேலும், நிறுவனத்தின் முந்தைய வெற்றிகரமான செயல்பாடுகள் மற்றும் போட்டியாளர்களின் திறன் போன்றவற்றை பற்றியும் தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தின் மீதான பயத்தை வெல்ல இவை துணையாக இருக்கும் என்பதே ஆசிரியரின் வாதம்.

தடைகளை நீக்க வேண்டும்!

புதுமைகளுக்கு எதிராக மிகப்பெரும் நிறுவனங்களுக்குள் இருக்கும் பல்வேறு தடைகளில் மிக முக்கியமானது மோசமான உட்புற தகவல் தொடர்பும் அரசியலுமே. பணியாளர்களுக்கிடையோ அல்லது நிறுவனத்தின் வெவ்வேறு குழுக் களிடையோ சரியான உறவும் புரிதலும் இல்லாத நிலையில், புதிய எண்ணங்களும் அதன்மூலம் ஏற்படும் மாற்றமும் சிரமமான ஒன்றே என்கிறார் ஆசிரியர். திறம்பட செயல்படும் சிறு குழுக்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் இணையாத நிலையில், அவற்றை ஒருங்கிணைக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு உயர்மட்ட தலைவர்களுடயதே.

புகழ்பெற்ற நிறுவனமான நோக்கியாவில் அறிவிக்கப்படாத விதி ஒன்று உள்ளது. அதாவது நிறுவன பணியாளர்கள் எவரும் அவர்களுடைய தனிப்பட்ட அலுவலக இடத்தில் தங்களது மதிய உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது மற்றும் உணவிற்காக நிறுவனத்திற்கு வெளியே யும் செல்லக்கூடாது என்பதே அது. நிறுவனத்தின் பொது இடத்தில் தங்களது மதிய உணவை எடுத்துக் கொள்ள பணியாளர்கள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். மேலும், மானிய விலையில் உணவுப்பொருட்களும் தரப்படுகின்றது. அங்கு வெவ்வேறு துறைகள் மற்றும் குழுக்களிடையே அறிவிக்கப்படாத ஒரு சந்திப்பு ஏற்படுத்தப்படுகின்றது. இது பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புரிதல் ஏற்பட காரணமாக அமைகின்றது.

பொதுவாகவே ஒரு நிறுவனம் பெரிதாக வளர வளர, சுமூகமான உட்புற தகவல் தொடர்பு கொஞ்சம் கடினமே. பணியாளர்கள் பலரும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது இதற்கு நல்ல பலனை தரும் என்பதே ஆசிரியரின் கூற்று. கருத்தரங்கம், குழு விளையாட்டு, விநாடி வினா போன்றவற்றை நடத்தி பணியாளர்களிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தலாம்.

தேவையான நேரம் வேண்டும்!

புதுமைகள் படைப்பதிலும், புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதிலும் உள்ள பொதுவான சிக்கல் நேர பற்றாக்குறை. இருக்கும் நேரமெல்லாம் தினசரி அலுவல்களுக்கே சரியாக இருக்கும் நிலையில், புதிய சிந்தனைகளுக்கான நேரம் கிடைப்பது அரிதானதே. தேவையான நேரம் மற்றும் வசதிகளை பணியாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் போது மட்டுமே அவர்களிடமிருந்து புதிய விஷயங்களை எதிர்பார்க்க முடியும். இதுவும் மேலாளர்களின் மிக முக்கிய பொறுப்பே. நிறுவன விதிகளுக்கு ஏற்ப இவ்வசதியை ஏற்படுத்த வேண்டியது பல நல்ல புதிய யோசனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஆசிரியர்.

இதுபோன்ற விஷயங்களுக்காக கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களையும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றன. 3எம் நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் அவர்களது அலுவலக பணி நேரத்தை பதினைந்து சதவீத அளவிற்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த அனுமதிக்கின்றது. இதில் கணிசமான அளவிற்கு வெற்றியையும் பெற் றுள்ளன.

புதிய வழிகள் வேண்டும்!

நிறைய தொழில் நிறுவனங்களின் வணிக புதுமைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை புதிய வழிகளில் அணுகுவதிலேயே தொடங்குகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கிராமப்புற அமெரிக்கர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள சிறிய நகரங்களில் உள்ள கடைகளில் வாங்கி வந்தனர். தேவையான நேரத்தில் தேவைப்படும் பொருட்கள் கிடைக்காமலும், அதிக விலையினால் அவதிப்பட்டனர். இதற்காக ரயில்வே நிறுவன முகவரான ரிச்சர்ட் சியர்ஸ் என்ற இளைஞர் புதிய அணுகுமுறையினை உருவாக்க விரும்பினார். கடிகாரத் தயாரிப்பாளரான அல்வாஹ் ரோய்பக் என்பவருடன் இணைந்து அஞ்சல் வழியில் பொருட்களை வழங்கும் முறையை ஆரம்பித்தார். ரயில்வே மற்றும் அஞ்சல் துறையை இதற்காக உபயோகப்படுத்தினார். நாளடைவில் உலகின் மிகப்பெரும் சில்லறை விற்பனையாளராக உருவெடுத்தார்.

பெண் முகவர்களைக் கொண்டு நேரிடையாக வீட்டிற்கே சென்று பெண் களுக்கான ஒப்பனைப் பொருட்களை விற்பனை செய்தது அவான் நிறுவனம். மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் பெரும் வெற்றிபெற்ற ஆம்வே நிறுவனம் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தனது வணிகத்தை நடத்திக்கொண்டுள்ளது. புதிய பொருட்களையும், சேவைகளையும் உருவாக்கும் முனைப்பு அவற்றை வாடிக்கையாளர்களிடம் புதிய வழிகளில் கொண்டுசேர்ப்பதிலும் இருக்க வேண்டியது அவசியம்.

தொழிலில் புதுமை படைக்க விரும் பும் தலைவருக்கு மாற்றத்திற்கான பார்வையும், அதற்கான செயல்பாட் டிற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் திறனும் வேண்டும். நூலாசிரியரின் கூற்றுப்படி புதிய எண்ணங்களை மாற்றத்திற்கான கருவியாக்கி அதன்மூலம் புதியதோர் தலைமை படைப்போம்.

p.krishnakumar@jsb.ac.in

SCROLL FOR NEXT