இங்கிலாந்தின் சொகுசு மோட்டார் சைக்கிள் நிறுவனமான டிராம்ப், சென்னையில் தனது 8-வது விற்பனையகத்தை திங்கள்கிழமை திறந்துள்ளது. தென்னிந்தியாவில் இந்நிறுவனம் தொடங்கியுள்ள முதலாவது விற்பனையகம் இதுவாகும்.
ஹார்பர் சிட்டி டிராம்ப் என்ற பெயரிலான இந்த விற்பனையக திறப்பு விழாவில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சும்ப்ளி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிறுவனம் ஏற்கெனவே பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, புணே, மும்பை, ஆமதாபாத், புது டெல்லி ஆகிய நகரங்களில் விற்பனையகங்களைத் தொடங்கியுள்ளது.
சென்னையில் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம் ஒருங்கிணைந்த வகையில் அதாவது விற்பனைக்கு பிந்தைய சேவை வசதிகளைக் கொண்டதாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியுள்ள இந்த நிறுவனம் 5 மாடல்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இதுவரை இந்நிறுவன பைக்குகளை வாங்க 450 வாடிக்கையாளர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.
இந்நிறுவன மோட்டார் சைக்கிள் விலை ரூ. 5.70 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையாகும்.