வணிகம்

பங்குச் சந்தை சரிவால் பதற்றப்பட தேவையில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம்

செய்திப்பிரிவு

சர்வதேச சூழல் காரணமாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக முதலீட் டாளர்கள் பதற்றப்படத் தேவை யில்லை என்று மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

கடந்த வியாழன் அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்தது. அதன் தொடர்ந்து பேசிய அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது.

பங்குச்சந்தை சரிவு குறித்து முதலீட்டாளர்கள் அதிக பதற்றம் கொள்ளத்தேவை இல்லை. நாட்டின் பொருளாதார அடிப்படை பலமானது என்பதை முதலீட் டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவின் தொடர் நிகழ்வாக இந்திய சந்தையிலும் விற்கும் போக்கு அதிகரித்தது. சந்தை சரிவதற்கு இந்தியாவுக்கு வெளியே பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த தெளிவான முடிவு எடுக்காதது, சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலைமை, ஐரோப்பிய நிலவரம் ஆகிய சர்வதேச காரணங்களால் இந்தியாவிலும் சரிவு ஏற்பட்டது.

அதனால் முதலீட்டாளர்கள் அதீத பதற்றப்படத் தேவை இல்லை. சர்வதேச பொருளாதாரம் மோசமான சூழ்நிலையிலும் கூட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்குத் தேவையான கொள்கைகளை உருவாக்கி வருகிறது.

சர்வதேச மந்தை நிலையிலும் கூட சேவை மற்றும் உற்பத்தி துறை வேகமாக மீண்டு வருகிறது. பருவமழை மற்றும் தேவை உயர்வு காரணமாக இந்த துறைகளின் வளர்ச்சி மேலும் உயரலாம்.

வங்கிகளின் வாராக்கடனை குறைப்பதற்கு பல யோசனைகளை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த பிரச்சினை விரை வில் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இந்த கடன்கள் சில வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டவை. வங்கிகளின் நிதிநிலைமை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடன் செலுத்தாதவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் எடுத்து வருகின்றன.

பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்திய பொருளாதாரத்தில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை பலப்படுத்துவது அவசியம் என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

பங்குச்சந்தை உயர்வு

தொடர்ந்து நான்கு நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சிறிதளவு உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் 34 புள்ளிகளும், நிப்டி 4 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகத்தின் இடையே நிப்டி 7000 புள்ளிகளுக்கு மேலே சென்றாலும், வர்த்தகத்தின் முடிவில் 7000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது.

வியாழன் வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,112 கோடி ரூபாய் முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்தனர்.

SCROLL FOR NEXT