மும்பை சர்வதேச விமானநிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றுள்ளது அதானி குழுமம்.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.
ஏற்கெனவே 8 விமான நிலையங்களின் நிர்வாக உரிமையை வைத்துள்ள அதானி குழுமம் இதன் மூலம் இந்திய விமான நிலையங்கள் மீது 25% உரிமையைப் பெற்று தனிப்பெரும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சரக்கு விமானப் போக்குவரத்திலும் 33 சதவீதம் உரிமையைப் பெற்றுள்ளது.
இது குறித்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், உலகத்தரம் வாய்ந்த மும்பை விமானநிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றிருப்பதில் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும். மும்பை விமான நிலையம் வர்த்தக ரீதியாகவும், பயணிகளுக்கு ஓய்வு தருவதில் சொகுசுடையதாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் கட்டமைக்கப்படும். மேலும், உள்ளூர்வாசிகளுக்கு ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
அதானி குழுமம் நவி மும்பை சர்வதேச விமானநிலைய கட்டுமானத்தை அடுத்த மாதத்துக்குள் தொடங்கிவிடும். 2024ல் விமானநிலையம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
முன்னதாக கடந்த 2020ல் அதானி குழுமம் மங்களூரு, அகமதாபாத், லக்னோ, குவாஹாட்டி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனது கட்டுக்குள் கொண்டுவந்தது.
தற்போது மும்பை விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றுள்ள நிலையில் உலகத்தரத்தில் விமானநிலையங்களை மேம்படுத்தி நாட்டின் டயர் 1 நகரங்களை டயர் 2, டயர் 3 பிரிவில் உள்ள நகரங்களுடன் இணைக்க வேண்டும் என்று கவுதம் அதானி விருப்பம் தெரிவித்துள்ளார்.