'பட்ஜெட்' என்றாலே வரவு-செலவுக் கணக்கு என்றுதான் பொருள் கொள்கிறோம். தவறில்லை. ஆனால்.... 'இன்னின்ன வகைகளில் இவ்வளவு வரும்; இன்னின்ன வகைகளில், இவ்வளவு செலவு செய்யலாம்' என்றுபோகிற போக்கில் சொல்லி விட்டுப் போய் விட இயலாது.
அதிலும், வரவை விடவும் செலவுதான் அதிகம் ஆய்வுக்கு உள்ளாகிறது. ஒவ்வொரு ஒதுக்கீட்டுக்கு முன்பும், எத்தனை கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டி இருக்க வேண்டி வருகிறது!
இந்தியப் பொருளாதாரத்தின் அத்தனை அம்சங்களையும் ஆராய்ந்து, எவ்வெந்தத் துறைக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து, 'சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து' மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப் படுகிறது - மத்திய பட்ஜெட்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக, அரசு வெளியிடும் பொருளாதார ஆய்வறிக்கை ('எகனாமிக் சர்வே') பலரின் கவனத்துக்கு எட்டுவதே இல்லை. உண்மையில், அரசின் பொருளாதாரக் கொள்கை, அரசு பயணிக்க நினைக்கும் பாதை, கடந்த காலச் செயல்பாடுகளின் மதிப்பீடு, எதிர்காலத்துக்கான செயல் திட்டம் என எல்லாமே இந்த ஆய்வறிக்கையில் அடங்கி இருக்கிறது.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் வரை அத்தனைக்கும் ஆய்வறிக்கைதான் ஆதாரம். இவற்றை நிறைவேற்றத் தேவையான நிதி ஒதுக்கீடு மட்டுமே பட்ஜெட்டில் இடம் பெறும்.
எந்தத் திசையில் நாம் பயணிக்க இருக்கிறோம் என்பதை ஆய்வறிக்கை சொல்லும்; எவ்வளவு விரைவாக (அல்லது மெதுவாக) பயணிக்கப் போகிறோம் என்பதை பட்ஜெட் தீர்மானிக்கும்.
ஓர் அரசின் பொருளாதார செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு ஆய்வறிக்கையே நம்மிடம் உள்ள ஒரே உரைகல்.
எல்லாம் சரி.... கடந்த காலங்களில் பொருளாதார ஆய்வறிக்கைகள் என்னவெல்லாம் சொல்லிற்று..? எவையெல்லாம் நிறைவேறின..? 'கண்டு கொள்ளாமல்' விடப்பட்டவை என்னென்ன...? நமது பொருளாதாரத் திட்டமிடலில், வாக்குறுதிக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி எவ்வளவு...?
பார்த்து விடுவோமே...!
எளிய உதாரணங்களுடன்.. இனிய நடையில், 'வருகிறது பட்ஜெட்'!