மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப் படம். 
வணிகம்

கடந்த 8 மாதங்களில் முதல் முறை: ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது

செய்திப்பிரிவு

கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் முதல் முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2021, ஜூன் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.92 ஆயிரத்து 849 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகிய நிலையில் முதல் முறையாக ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் கடந்த மாதம் சரிந்துள்ளது.

ஆனால், 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் வரி வசூல் 2 சதவீதம் அதிகம் வருகிறது.

நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நடந்த வர்த்தகத் தொடர்புகள், பரிவர்த்தனைகளை அடிப்படையாக வைத்தே ஜூன் மாதம் வரி வசூல் நடக்கும்.

அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வர்த்தக நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டு ஜிஎஸ்டி வரி வசூல்குறைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் ரூ.92 ஆயிரத்து 849 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.16 ஆயிரத்து 424 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.20 ஆயிரத்து 397 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.49 ஆயிரத்து 79 கோடியாகும்.

இதில் செஸ் வரியாக ரூ.6 ஆயிரத்து 949 கோடி கிடைத்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்குப் பின் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்குக் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாகக் கடந்த மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி வசூலானது''.

இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT