கடந்த வாரம் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிக புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகம் முடிவில் 467 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 24217 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 132 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7362 புள்ளிகளானது.
செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. மத்தியில் பாஜக தலமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி வெளியிடும் நிதிக் கொள்கையாகும். இதனால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக. பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது.
கேபிடல் கூட்ஸ், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், உலோகம் சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக சீனாவின் தொழில்துறை உற்பத்தி அதிகரித்துள்ளதாக வெளியான அட்டவணை ஆசிய பிராந்தியத்தில் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு வழிவகுத்தது.
லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனப் பங்கு 6.23 சதவீதம் உயர்ந்து ரூ. 1,645.40-க்கும், ஓஎன்ஜிசி பங்கு 5.55 சதவீதம் உயர்ந்து ரூ. 399.25-க்கும், பார்தி ஏர்டெல் 5.03 சதவீதம் உயர்ந்து ரூ. 361.30-க்கும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு 4.02 சதவீதம் உயர்ந்து ரூ. 2,644.20-க்கும், டாடா ஸ்டீல் 3.75 சதவீதம் உயர்ந்து ரூ. 492.80-க்கும் விற்பனையாயின.
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை 1.39 சதவீதம் சரிந்து ரூ. 2,414-க்கும், சன் பார்மா 1.34 சதவீதம் சரிந்து ரூ. 599.25-க்கும், ஐடிசி 1.22 சதவீதம் சரிந்து ரூ. 337.35-க்கும், விப்ரோ 1.17 சதவீதம் சரிந்து ரூ. 499.10-க்கும், டாடா கன்சல்டிங் சர்வீசஸ் பங்கு 0.67 சதவீதம் சரிந்து ரூ. 2,129.90-க்கும் விற்பனையாயின.
பங்குச் சந்தையில் சமீப காலமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் அந்நிய நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு ரூ. 2,977.62 கோடியாகும்.