ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளால், மத்திய அரசு நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் என்றும் டாய்ஷ் வங்கியின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற் றாக்குறை இலக்கை எட்டுவிடும். ஆனால் அடுத்த நிதி ஆண்டில் இலக்கை அடைவது கடினம்.
ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதினால் ஏற்படும் செலவுகளை மத்திய அரசால் சரி செய்யமுடியாது. அடுத்த நிதி ஆண்டில் நிதிப்பற்றாக் குறை இலக்கு 3.5 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தப்படும் பட்சத்தில் 2016-17-ம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.8 சதவீதமாக இருக்கும்.
அதே சமயத்தில் ஏழாவது சம்பள கமிஷனால் மக்களின் சேமிப்புகள் அடுத்த சில ஆண்டுகளில் உயரும். இதனால் உள்நாட்டு முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதேபோல இந்த பரிந்துரையை அமல்படுத்தப்படும் பட்சத்தில் பணவீக்கம் உயர வாய்ப்பு இருக்கிறது. 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை பணவீக்கம் உயரலாம். அதேபோல குறைந்த பட்ச 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு இருக்கிறது என்று டாய்ஷ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.