கருப்பு பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கி றது. 2004-ம் ஆண்டு முதல் 2013 வரை இந்தியாவில் இருந்து ஓர் ஆண்டுக்கு ரூ.3.4 லட்சம் கோடி (5,100 கோடி டாலர்) வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்று இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. இது, இந்தியா ராணுவத்துக்கு ஓர் ஆண்டில் செலவிடும் தொகைக்கு இணையானது ஆகும்.
இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து ரூ.9.2 லட்சம் கோடி (13,900 கோடி டாலர்), ரஷ்யா ரூ.6.9 லட்சம் கோடி (10,900 கோடி டாலர்), மெக்ஸிகோ ரூ3.5 லட்சம் கோடி (5,280 கோடி டாலர்) அளவு தொகை ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி இருக்கிறது.
வாஷிங்டனில் இருந்து வெளியாகும் குளோபல் பைனான்ஷியல் இன்டெகரிட்டி என்னும் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. வரி ஏய்ப்பு, குற்றச்செயல்கள், ஊழல் உள்ளிட்ட இதர முறைகேடான நடவடிக்கைகள் மூலமாக பெறப்பட்ட பணம் இந்த நாடுகளில் இருந்து வெளியேறி இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு மட்டும் 1.1 லட்சம் கோடி டாலர் தொகை கருப்பு பணமாக வெளியேறி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இருந்து 33 லட்சம் கோடி ரூபாய் வெளியேறி உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதேபோல கடந்த பத்தாண்டு களில் சீனாவில் இருந்து 90 லட்சம் கோடி ரூபாயும், ரஷ்யாவில் இருந்து 69 லட்சம் கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு வளரும் நாடுகளில் இருந்து வெளியேறிய கருப்பு பணம் 46 ஆயிரத்து 530 கோடி டாலர். ஆனால் 2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி டாலரும், 2013-ம் ஆண்டு 1.1 லட்சம் கோடி டாலரும் வெளியேறி இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு சீனாவில் இருந்து 25 ஆயிரத்து 864 கோடி டாலர் வெளியேறி இருக்கிறது.
இது போல கருப்பு பணம் வெளியேறுவது வளர்ந்து வரும் நாடுகளுக்கு முக்கிய பிரச்சினை என்று ஜிஎப்ஐ நிறுவன தலைவர் ரேமண்ட் பேகர் தெரிவித்துள்ளார்.
கருப்பு பண நகைச்சுவை
இதற்கிடையே பதுக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்பது சிறந்த நகைச்சுவை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
கருப்பு பண நடவடிக்கைகளை தடுக்க அரசிடம் தெளிவான கொள்கை இல்லை. இதற்கு சரியான சட்டமோ, புலனாய்வு திறனோ இல்லை. இந்த நடவடிக் கைகளில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைப்பதும் இல்லை. கருப்பு பணவிவகாரத்தில் மத்திய அரசு தோற்றுவிட்டது. தற்போது இருக்கும் சட்டத்தின் மூலம் கருப்பு பண நடவடிக்கையை தடுக்க முடியாது. தற்போதைய சட்டத்தின்படி யாரும் 60 சதவீத வரி செலுத்த மாட்டார்கள்.
சிறப்பான புலனாய்வு திறன், சிறப்பான வழக்கு நடைமுறைகள் மூலம் வழக்கை முடிப்பது ஆகியவை நடைபெறாத வரையில் கருப்பு பண நடவடிக்கைகளை குறைக்க முடியாது. உங்களுக்காக கருப்பு பணம் காத்திருக்காது. கருப்பு பணம் எங்கு இருக்கிறது என்பதை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும்.
அரசாங்கத்திடம் சிறப்பு புலனாய்வு துறை இருந்தாலும், அதில் ஊழல் இருக்கிறது. கருப்பு பண நடவடிக்கைகளில் ஈடுபவர்கள் மீது அதிகபட்சம் ஆறு மாதங்களில் வழக்கு நடத்தி அவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும். இதனை செய்யாத வரையில் கருப்பு பண நடவடிக்கையை குறைக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேரடி வரி விதிப்பு முறைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்ட கெல்கர் கமிட்டியின் உறுப்பினர் குழுவில் மோகன்தாஸ் பாய் இடம்பெற்றிருந்தார்.