வணிகம்

பி.எப். நிதி: வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதி

செய்திப்பிரிவு

பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா முதல் அலையின்போது பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. கரோனா 2-வது அலையில் தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்பு தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைவான தொகையை எடுக்கவும் விண்ணப்பிக்கலாம்.

கரோனா சிறப்பு முன்பணம் எடுக்கும் திட்டம் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப் பினர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக ரூ.15,000-க்கும் குறைவான மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் பயன் அடைவர். இந்த திட்டத்தில் இதுவரை 76.31 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ.18,698.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கரோனா அலையின்போது இபிஎப் நிதியில் இருந்து முன்பணம் எடுத்தவர்கள் இப்போதும் முன்பணத்தை எடுக்கலாம். தற்போதைய நடைமுறை களின்படி விண்ணப்பித்த 20 நாட்களில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது.

கரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் வழங்க இபிஎப்ஓ உறுதி பூண் டுள்ளது. இதன்படி கே.ஒய்.சி. படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தானியங்கி நடைமுறையில் விரைவில் பணம் விநியோகம் செய்யப்படும்.

இந்த நிலையில், தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, அதிகபட்சம் 75 சதவீதம் எடுத்துக் கொள்ள வருங்கால வைப்பு நிதியம் கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது.வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும், தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான தகுதியும் தொடரும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT