அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்1பி விசா எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை செய்யும் சட்ட வரைவு ஒன்றை இரண்டு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஹெச்1பி விசாவை 15,000 ஆக குறைக்க இவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சட்ட வரைவை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினரான நெல்சனும், குடியரசு கட்சியை சேர்ந்த ஜெப் செஸன்ஸூம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் விசா வழங்கும் அளவை கட்டுப்படுத்த வேண்டும், இந்த விசா கோருவோரில் அதிகம் ஊதியம் பெறுவோருக்கே முதலில் அளிக்க வேண்டும் என்றும், அவுட்சோர்சிங் நிறுவ னங்கள் மூலம், குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுவதை மாற்றுவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் நெல்சன் தெரிவித்தார்.
தற்போது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் உயர்கல்வி முடித்தவர்கள் 20,000 பேர் உட்பட ஒவ்வொரு வருடமும் அதிகபட்சமாக 85,000 ஹெச்1பி விசா அனுமதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து செல்லும் ஐடி ஊழியர்களுக்கு அதிக அளவில் இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதாவில் ஹெச்1பி விசாவில் அனுமதிக்கும் எண்ணிக்கையை 15,000 ஆக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊதிய அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 70,000 ஹெ1பி விசாக்களை வழங்குவதற்கு உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரியுள்ளது.
கடந்த மாதத்தில் நெல்சன் மற்றும் செனட் உறுப்பினர்கள் ஹெச்1பி விசாவில் சீர்திருத்தம் செய்வதற்கு தனி சட்டத்தை தாக்கல் செய்தனர். முக்கியமாக அமெரிக்க ஊழியரை நீக்கிவிட்டு ஹெ1பி விசா உள்ள ஊழியரை நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.