ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச விமான நிறுவனங்கள் அடங்கிய ஸ்டார் அலையன்ஸில் இணை வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் லுப்தான்ஸா, ஏர் கனடா, தாய் ஏர்வேஸ் உள்ளிட்ட 26 விமான நிறுவனங்கள் உள்ளன. லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்டார் அலையன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஸ்டார் அலையன்ஸில் ஏர் இந்தியா இணைந்தது தொடர்பான முறைப்படி அறிவிப்பை செவ் வாய்க்கிழமை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வெளியிட்டார்.
இதில் இணைந்ததன் மூலம் இக்குழுவில் உள்ள நிறுவனங்கள் பெறும் அனைத்து பலன்களையும் ஏர் இந்தியா நிறுவனமும் அதில் பயணிக்கும் பயணிகளும் பெறுவர்.
ஸ்டார் அலையன்ஸில் 2007-ம் ஆண்டு ஏர் இந்தியா இணைந்தது. ஆனால் 2011-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் இக்குழுவில் நீடிப்பதற்குரிய தகுதிகள் சிலவற்றை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இணைவது நிறுத்திவைக்கப்பட்டது.
ஸ்டார் அலையன்ஸில் உள்ள விமான நிறுவனங்கள் 193 நாடுகளுக்கு விமானங்களை இயக்குகின்றன.