புதிய புத்தகங்களை சில காலம் படிக்க வேண்டாம் எனும் அளவிற்கு அயர்ச்சியை உணர்ந்தேன். வாரம் ஒரு புத்தகம் பற்றி எழுதும் வேலை சுவாரசியம்தான். ஆனால் படித்த புத்தகத்தை சாவகாசமாக அசை போடும் சுகானுபவம் போய்விட்டது. நேரக் கெடுவோடு புத்தகம் படிப்பது ஒரு தொழில் அபாயம் (Occupational Hazard).
இன்னும் பல மாதங்கள் எழுதும் அளவுக்குப் படித்த புத்தகங்கள் உள்ளன. ஆனால் புதுப் புத்தகங்களின் துரத்தல்கள் நின்றபாடில்லை.
“Tuesdays with Morrie படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் வாசகர் ஒருவர். இல்லை என்றதும் அதை எனக்குத் தருவித்த வேகமும் அது தன் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் என்று சொன்னதும் படிக்கத் தோன்றியது. ஒரு படம் பார்ப்பது போல படித்து முடித்தேன். ஒரே ஒரு இடைவேளையுடன்.
என்னுள் மகேந்திரன் காட்சி அமைப்பு என்ன செய்யுமோ, வண்ணதாசன் எழுத்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமோ, இளையராஜா இசை காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்குமோ இவை அனைத்தையும் இந்த புத்தகம் செய்தது.
இவ்வளவு ஈரமான புத்தகம் வணிக சூழலில் பிரபலமாக இருப்பது ஆரோக்கியமாகப் பட்டது.
மிட்ச் ஆல்பம் என்பவர் தன் வாழ்க்கையின் நிஜ அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
தன் கல்லூரி காலத்தில் மிகவும் பிரியத்திற்குரிய சமூகவியல் பேராசிரியர் மோரியை வாழ்க்கையின் இயந்திரச் சுழலில் சிக்கி மறந்தே போகிறார்.
ஒரு வகை நரம்பியல் வியாதியால் திடீரென தாக்கப்படும் ஆசிரியர் மோரி தன் சாவை எப்படி எதிர்கொள்வது என யோசிப்பதற்குள் படுக்கையில் விழுகிறார். சில காலம்தான் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். பணி ஓய்வும் கொடுத்து அனுப்புகிறார்கள். இனி மரணத்தை எதிர்கொள்ளும் ஒரே வேலை தான். அதற்காக ஏன் பாடம் நடத்துவதை நிறுத்த வேண்டும்?
படுத்தவாறு மாணவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். இயலாமை அவரை வாட்டி எடுக்கிறது. சிறுநீர் கழிக்கக்கூட மாணவர்கள் துணை தேவைப்படுகிறது. இருந்தும் தொடர்ந்து தினம் ஒவ்வொரு தலைப்பாக பாடம் நடத்துகிறார்.
இது தெரிந்த தொலைகாட்சி தயாரிப்பாளர் அவரை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். அப்போது மோரி பேசுவதைத் தற்செயலாகப் பார்த்த மிட்ச் திடுக்கிடுகிறார். உடனடியாகப் போய் பார்க்கக் கூடத் தயங்குகிறார்.
மிட்ச் ஆசிரியரைத் தேடிப் போகிறார். கல்லூரி நாட்களில் அவரை “கோச்” என்று அழைக்கும் பழக்கம் உண்டு. மீண்டும் ஆசிரியரைத் தேடிச் செல்லும் பக்கங்கள் நெகிழ்ச்சியானவை.
இடையில் மிட்ச் பணிபுரிந்த பத்திரிகை நிறுவனம் தொழிலாளர் உறவு காரணமாக மூடப்படுகிறது. மிட்ச் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார். சொந்த வாழ்வின் இன்னல்களும் நிறைய.
ஆசிரியர் மோரி சொல்லாமல் புரிந்து கொள்கிறார். பாடங்கள் தொடர்கின் றன. ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அவரைப் பார்க்க மளிகை சாமான் களுடன் செல்வது வாடிக்கையானது. மோரியால் எதையும் சாப்பிட முடியாத நிலை. மூச்சு விடவும் சங்கடம். அனைத்து வெளியேற்றங்களும் பிறர் உதவியுடன்தான். ஆனால் அவர் மனம் கூர்மைப்பட்டிருந்தது. நகைச்சுவை உணர்வு பெருகியிருந்தது.
மரணத்தைக் கற்றுக் கொண்டால் வாழக் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு தலைப்பில் பேசுகிறார் ஆசிரியர். பெரும் தத்துவ போதனையாக மாற வேண்டிய உரை அன்பில் ஒழுகி எளிய வாக்கியங்களாக விழுகின்றன.
தன் தம்பியின் உறவைத் தொலைத்த காயம், தன் விருப்பத்திற்கும் தான் செய்யும் தொழிலுக்கும் உள்ள முரண்பாடு, குடும்ப பாரம் பற்றிய பயம், பொருளாதார நெருக்கடி என அனைத்திற்கும் விடை காண்கிறார் மாணவர்.
கடந்த காலத்தின் கசப்பு, வயதாகுதல், மரணம், மன்னிப்பு, காதல், திருமணம், பிள்ளைகள், குடும்பம், உணர்வுகள், பணம், கலாச்சாரம் என அனைத்தையும் தொட்டுப் பேசுகிறார். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விஷயம் என்று. கொஞ்சம் வார்த்தைகளிலும் நிறைய அன்பிலும் கண்ணீரிலுமாய் உரையாற்றுகிறார் ஆசிரியர்.
தன் காலத்தில் ஆடலும் பாடலும் சிரிப்பும் துடிப்புமாய் இருந்த ஆசிரியர் மரணப் படுக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதைப் பார்க்கிறார் மிட்ச்.
தன் வாழ்க்கையையும் தன்னையும் வெளியே இருந்து பார்க்க உதவி செய்த நோய்க்கும் தனிமைக்கும் நன்றி சொல்கிறார். எல்லா துக்கங்களையும் கோபங்களையும் கடந்து சம நிலைக்கு வந்து எல்லாம் அன்பே என்கிறார்.
அன்பு மனிதனை பதமாக்குகிறது. பக்குவம் செய்கிறது. மனிதர்களை அவர்கள் பிழைகளையும் பொறுத்து நேசிக்க வைக்கிறது. பிறரை புரிந்து கொள்ள வைக்கிறது.
சாகும் தருவாயில், “இன்னும் ஒரு நாள் இருந்தால் என்ன செய்ய பிரியப்படுகிறீர்கள்?” எனும்போது ஒரு சாமானியனின் நிறைவான தினசரி வாழ்வு நிகழ்ச்சியை பட்டியல் இடுகிறார். இப்போது ஆசிரியர் சொல்லாமலே பல விஷயங்கள் மாணவனுக்குப் புரிகிறது. இழத்தல்தான் ஒரு பொருளின் மதிப்பை உணர்த்துகிறது!
மரணம் மனிதர்களைத்தான் பறிக்கும். உறவுகளை வளர்க்கும். மனிதர்களை புரிந்து கொள்ள மரணத்தை படிக்க வேண்டும்.
இந்து, புத்தமத தாக்கம் மோரியிடம் தெரிகிறது. பற்றற்று வாழும் நிலை பற்றி கூறுகையில் மரணம் ஒரு மனிதனின் மனதை எப்படித் திறக்கிறது என்று யோசிக்க வைக்கிறது.
கடைசியில் அந்த ஆசிரியர் அமரராகிறார். வந்த மாணவர் சிறந்த மனிதர் ஆக முயற்சிக்கிறார்.
வாழ்க்கை ஒரு ஆசான். மரணம் பேராசான். மரணம் பற்றி இப்படி ஒரு விரிவான புத்தகத்தை மிட்ச் உயிர்ப்புடன் எழுதியிருக்கிறார்.
படிக்கையில் உங்கள் ஆசிரியர் நினைவுகளும், உங்கள் பிரியமுள்ளோர் மரணங்களின் நினைவுகளும் உங்களைத் தாக்கும்.
உங்கள் ஈரப்பதத்தை பரிசோதிக்கும் இந்த புத்தகம் உங்களை சற்று மாற்றிப் போடும் என்றால் மிகையில்லை.
gemba.karthikeyan@gmail.com