நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் பரவல், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடனுக்கான வட்டி வீதம் நிதிக் கொள்கையில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி வீதத்தில் தொடர்ந்து 6-வது முறையாக எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் ரிசர்வ் வங்கி ( The Reserve Bank of India ) இன்று அறிவித்துள்ளது.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி வீதம் தொடர்ந்து 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கைக் குழு தொடர்ந்து 6-வது முறையாக வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது. கடைசியாக 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஓராண்டாக வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு நடப்பு நிதியாண்டு தொடங்கியபின் 2-வது முறையாக மும்பையில் கூடி விவாதித்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் ரிசர்வ் வங்கி (RBI ) கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''தொடர்ந்து 6-வது முறையாக நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்படவில்லை. தற்போதுள்ள 4 சதவீதம் அளவிலேயே நீடிக்கிறது. வங்கிகள் குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியில் டெபாசிட்டாக வைத்திருக்கும் தொகைக்கான வட்டியான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதம் 3.35 சதவீதம் அளவிலேயே நீடிக்கிறது.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், கட்டுக்குள் வைக்கவும் வட்டி வீதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என நிதிக்கொள்கை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தெரிவித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் (2021-22) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம், தொழிற்துறையில் ஏற்படுத்திய பாதிப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் எனக் குறைத்துக் கணித்துள்ளோம்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் (சில்லறை பணவீக்கம்) 5.1 சதவீதம் அளவிலேயே நீடிக்கும். மொத்தவிலை பணவீக்கம் 4 சதவீதம் அளவுக்கு 2026ஆம் ஆண்டுவரை பராமரிக்கப்படும். அதிகபட்சமாக 6 சதவீதம் வரையிலும் குறைந்தபட்சமாக 2 சதவீதம் வரை செல்லும்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் 8.5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும்.
கரோனா 2-வது அலையில் திடீரென அதிகரித்த தொற்று, உயிரிழப்புகள் போன்றவை பொருளாதாரம் மீண்டெழுந்து வந்ததில் சுணக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், சிறந்த நம்பிக்கையை உண்டாக்கவும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அனைத்து விதங்களிலும் சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்தும்''.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.