வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது.
நாடு முழுவதும் வீட்டு வாடகை தொடர்பான சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்க இது உதவும். மேலும் இது ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
இந்த, மாதிரி வாடகைகுத்தகை சட்டம், நாட்டில் துடிப்பான , நிலையான, அனைத்தும் உள்ளடக்கிய வாடகை வீடு சந்தையை உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான வருவாய் பிரிவினருக்கும், போதிய அளவிலான வாடகை வீடுகளை உருவாக்கும்.
இதன் மூலம் வீடுகள் இல்லாத நிலை தீர்க்கப்படும். இந்த மாதிரி வாடகை சட்டத்தால், வாடகை வீடுகள் படிப்படியாக முறையான சந்தையாக மாறுவதன் மூலம் நிறுவனமயமாக்க முடியும்.
காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வீடு பற்றாக்குறை பிரச்சனை நீங்கும்.
இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இது தவிர பல நாடுகள் மற்றும் அமைப்புகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
கனிம வளத்துறையில் இந்தியா- அர்ஜென்டினா ஆகியவை ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இத்துறையில் நிறுவன வழிமுறையை ஏற்படுத்தும். லித்தியம் எடுப்பது உள்பட கனிமவள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதுதான் இதன் நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்து இரு நாடுகளும் பயனடைய இது உதவும். கனிம நடவடிக்கைகளில் முதலீட்டையும் அதிகரிக்கும்.
மேலும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் இடையே நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் உட்பட நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் ,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.