வணிகம்

வணிக நூலகம்: உயரத்தை நோக்கி!

பி.கிருஷ்ணகுமார்

உலகமே மாற்றத்தை விரும்பும் இன்றைய சூழ்நிலையில், நாம் மட்டும் உறங்கிக்கொண்டிருந்தால், வெற்றி நம்மை உதறிவிட்டு சென்றுவிடும். அனுதினமும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தின் வழியே பயணித்துக்கொண்டிருக்கும் பரபரப்பான நமது வாழ்க்கைச்சூழலில், நாமும் நமக்கான மாற்றத்தை மேற்கொள்ளவேண்டியது அவசியமான ஒன்றாகிறது அல்லவா!. வெற்றியின் புதிய உயரங்களை எட்டிப்பிடிக்க நினைப்பவர்களுக்கான உத்திகளை தரும் புத்தகம் இது.

தொழில் ரீதியிலான அல்லது வேலை நிமித்தமான அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்கான மேம்பாட்டு நுட்பங்களை சொல்லித்தருகிறார் “அப்கிரேடு” என்னும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் “மார்க் சான்போர்ன்”. இந்த வழிமுறைகள் உங்களின் வழக்கமான செயல்பாட்டினை நல்ல நிலைக்கும், நல்ல செயல்பாட்டினை சிறந்த நிலைக்கும், சிறந்த செயல்பாடுகளை வியக்கத்தக்க நிலைக்கும் மாற்ற உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தொடர்ச்சியான மேம்பாடு!

ஒரு இலக்கிற்காகத் திட்டமிடுகிறோம். நமது கடின உழைப்பின்மூலம் அதில் வெற்றிபெற்று நமக்கான இலக்கை அடைந்துவிடுகிறோம். அதோடு எல்லாம் முடிந்துவிட்டதா?. போதும் என்று வெறுமனே இருந்துவிடவேண்டுமா?. கண்டிப்பாக இல்லை. எட்டிய இலக்கிற்கு அடுத்தபடியான மற்றுமொரு இலக்கினை நிர்ணயித்து, அதனை நோக்கிய பயணத்தைத் தொடங்க வேண்டும். மாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியமானது. நாம் நம்மை மேம்படுத்திக்கொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட நிலையோடு முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.

இந்த மேம்பாட்டு செயல்பாடானது நமது வாழ்க்கையில் நம்மால் அடிக்கடி உணரக்கூடிய செயலே. உதாரணமாக, நமது கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள் ஒன்றை வாங்குகின்றோம். அதன் புதிய மற்றும் மேம்பட்ட பதிப்பானது ஒரு வருடத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதை அறிவோம் அல்லவா!. நம்முடைய மென்பொருளின் 2.0 பதிப்பானது, விரைவிலேயே 2.1 பதிப்பாகவோ அல்லது அதன் அடுத்த பதிப்பாகவோ வெளிவந்துவிடுகின்றது. உண்மையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்பானது முடிவில்லாதது.

வாய்ப்புகளும் தொடக்கமும்!

வாழ்வின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியான மேம்பாடு முக்கியம். சரி, அதற்கான வாய்ப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம். எந்தெந்த விஷயங்களில் நம்மையும், நமது செயல்பாட்டினையும் நம்மால் மேம்படுத்திக்கொள்ள முடியும்?. நமது தொழிலையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தோமானால், முன்னேற்றத்திற்கான எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதை அறியலாம். நமது நிறுவன தயாரிப்பு, சேவைகள், நமது எண்ணங்கள், கருத்துகள், வாழ்க்கைமுறை, உடல்நலம், உறவுமுறை மற்றும் பங்களிப்பு என இந்த பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்வதைக் காணலாம்.

வாய்ப்புகளுக்கு அடுத்து, இந்த மேம்பாட்டினை நாம் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி எழுகிறது அல்லவா!. நமது தற்போதைய நிலையானது, நாம் இந்த நொடி எங்கிருக்கிறோம் என்பதே. இந்த நிலையிலிருந்து நாம் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஆராய வேண்டியது அவசியமான ஒன்று. முதல் கேள்வி, நாம் செல்ல வேண்டிய இடம் எது? அதாவது, நாம் அடையவேண்டிய இலக்கு என்ன?. இரண்டாவது கேள்வி, எப்படி அந்த இடத்தை அடைவது? அதாவது, நமது இலக்கிற்கான செயல்பாடு என்ன?. இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலே, நமது வாழ்க்கை பயணத்தை பெரிதும் பாதிக்கின்றது என்கிறார் ஆசிரியர்.

வரலாறு முக்கியமல்ல!

நமக்கான இலக்கை அடைவதற்கு நமது கடந்தகால வரலாறு பெரிதாக ஒன்றும் உதவுவதில்லை என்கிறார் ஆசிரியர். கடந்தகால சாதனை, விருதுகள் மற்றும் அங்கீகாரம் போன்றவை வெறுமனே நினைவுகூரத்தக்க புகைப்படங்கள் போன்றதே தவிர அவை ஒன்றும் நமது வருங்காலத்தை கணிக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. “மரிலின் பெர்குசன்” அவர்களின் கூற்றுப்படி, நமது கடந்தகாலம் நமக்கான ஆற்றலாகாது.

கடந்தகாலத்தில் நாம் அடைந்ததை எதிர்காலத்தில் நம்மால் அடையமுடியாது என்பதோ அல்லது கடந்தகாலத்தில் நாம் பெறமுடியாமல் போன விஷயங்களை நம்மால் எதிர்காலத்தில் பெறமுடியாது என்பதோ கண்டிப்பாக இல்லை.

கடந்தகாலத்தில் எதைப் பெற்றோம் அல்லது எவ்வளவு பெற்றோம் என்ப தெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அவற்றையெல்லாம் விட அதிகமான குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிவதற்கான வல்லமை நமக்கு உண்டு என்பதை மனதில் நிலைநிறுத்த வேண்டும். பல கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கலாம், மிகச்சிறந்த விருதுகளை பெறலாம், வெற்றிகரமான சாம்பியன் ஆகலாம், பலரால் பெரிதும் மதிக்கப்படலாம், அடுத்தவர்களின் மீதான அன்பு அதிகரிக்கலாம். இவற்றிற்கெல்லாம் நமது கடந்தகால வரலாறு முக்கியமல்ல. நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையினையும் நம்மால் மேம்படுத்திக்கொள்ளவும், அதன்மூலம் மாபெரும் வெற்றியினை பெறவும் முடியும்.

எதிர்பார்ப்புகளை உயர்த்துவோம்!

வாழ்வில் நம்மால் எதிர்கொள்ளப்படும் மிகச்சிறந்த வரையறைகளானது, உளவியல் ரீதியிலானதே தவிர உடல் ரீதியிலானது அல்ல. இதன்மூலமே சிலர், அவர்களின் உண்மையான திறனைவிட அதிக வெற்றிகளை சிலநேரங்களில் பெற்றுவிடுகின்றனர். திறன்களின் மீதான அவர்களது நம்பிக்கை மற்றும் மன வலிமையே இதற்கு காரணம். நமக்கான வெளிப்புற உலகை மாற்றுவதற்கு முன், நமது உட்புற உலகான மனதை நாம் கண்டிப்பாக மேம்படுத்திக்கொள்ளவேண்டும். சாத்தியமான விஷயங்களின் மீதான நமது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை முதலில் நாம் உயர்த்திக்கொள்ளாமல், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கான எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளக்கூடாது.

நம்முடைய சொந்த எதிர்பார்ப்புகளின் மீதான, தீவிரமாக கருத்தில்கொள்ளக்கூடிய வகையிலான கேள்விகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?, உறவுமுறைகளில் எந்தளவு மேம்பாட்டினை பெறமுடியும்?, எனது வேலையினை மேலும் எவ்வளவு சிறப்பானதாக செய்யமுடியும்?, எனது நேரத்தை மேலும் பயனுள்ளதாக எந்தளவில் உபயோகிக்க முடியும்?, தற்போதைய நிலையைவிட அதிக மகிழ்ச்சியுடன் என்னால் இருக்க முடியுமா?. இந்த கேள்விகளின் வாயிலாக நமக்கான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதே ஆசிரியரின் கூற்று.

தடைகளைக் கண்டறிவோம்!

எந்தவொரு செயல்பாடானாலும் அதன் பயணத்தில் சில தடைகளை சந்தித்தே தீரவேண்டும் அல்லவா!. கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் ஆகியவற்றை கையாள்வதற்கான மிகச்சிறந்த வழி, அவற்றை சரியாக அடையாளம் காண்பதே என்கிறார் ஆசிரியர். நமது எண்ணங்கள் மற்றும் திட்டங்களை முடக்கச் செய்யும் காரணிகள், கட்டுப்பாடுகள், தடைகள் மற்றும் தடயங்களை தீவிர தணிக்கையின் மூலமாக சரியாக தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

இந்தத் தடைகளைப் பொதுவாக இரண்டு வகைகளாக வகைப்படுத்த முடியும். முதலாவது, நமது சூழ்நிலைகளைப் பொருத்து நமக்கு ஏற்படும் குறிப்பிட்ட சில தடைகள். இவை முழுக்கமுழுக்க ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது. இரண்டாவது, வழக்கமான மற்றும் பெரும்பாலானவர்களுக்கு பொதுவான தடைகளாக கருதப்படுபவை. சரியான வழிகாட்டுதல் இல்லாமை, குறைபாடான அர்பணிப்பு உணர்வு, செயல்பாட்டிற்கான போதிய திறன் இல்லாதது, வளர்ச்சியற்ற திறமைகள், சரியான திட்டம் இல்லாதது மற்றும் தவறான நேர மேலாண்மை போன்றவை இதில் அடங்கும். இவற்றின் சரியான அடையாளமே இதன் தீர்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றது.

மாற்றங்களை ஏற்போம்!

நமது வாழ்வில் நாம் கட்டுப்படுத்தக்கூடாத மற்றும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் ஒன்று மாற்றம். நமக்கு ஏற்படும் மாற்றங்களில் சுமார் 94 சதவீத மாற்றங்கள் மற்றவர்களாலும் நமது சூழ்நிலைகளாலும் நம்மீது திணிக்கப்பட்டவை என்பதே நிபுணர் களின் மதிப்பீடாக இருக்கின்றது. வாழ்வில் நிலையான ஒரு விஷயம் இருக்குமானால், அது இந்த உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதேயாகும். உலகம் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், நாமும் மாற்றங் களை ஏற்றுக்கொண்டு அதன் வழியிலேயே வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய காலாண்டு விற்பனை இலக்கினை வெற்றிகரமாக முடித்துவிடும் நிலையில், அவருக்கான அடுத்த காலாண்டிற்கான இலக்கு உயர்த்தி கொடுக்கப்படுவதே இன்றைய சூழல். இந்த உலகம் மிக வேகமாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கு ஈடான மாற்றம் நமக்குள்ளும் ஏற்பட வேண்டும். நம்மைச்சுற்றி ஏற்படும் மாற்றத்தை நாம் விரும்பவில்லை என்றாலும், நமது வேலையினையோ அல்லது முகவரியையோ மாற்றுவதன் மூலம் நம்மால் மாற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேம்பாட்டிற்கான வழிமுறைகளையும் நமக்கான வாய்ப்புகளையும் சரியாக கண்டறிந்து, மாற்றங்களை ஏற்று, எதிர்வரும் தடைகளை தாண்டி முன்னேறிசெல்ல முடிவெடுப்போம்.

p.krishnakumar@jsb.ac.in

SCROLL FOR NEXT