தொடர்ந்து மூன்றாவது வருடமாக தங்கம் சரிவைக் கண்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் பத்து கிராம் தங்கம் 1,000 ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டிருக்கிறது. மற்ற சொத்துகளில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. மத்திய அரசு வீடுகளில் மற்றும் கோயில்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வெள்ளி அதன் விலையி லிருந்து 8 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது. இந்த வருடம் தங்கத்தின் விலையானது 5 சதவீதம் சரிந்துள்ளது.
2015-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு மிக நிலையற்றதாக இருந்ததாலும் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக தங்கத்தின் விலை சரிவைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது சீனாவின் பொருளாதாரம் சரிவைக் கண்டதும் தங்கத்தின் சரிவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த வருடம் தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்து வதற்காக அரசாங்கம் தங்க சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி வீடுகளிலும் கோயில்களிலும் உள்ள தங்கத்தை வங்கிகளில் சேமிக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த வருட தொடக்கத்தில் தங்கத்தின் விலை பத்து கிராமிற்கு ரூ. 26,700 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25,500 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல வெள்ளியின் விலை இந்த வருட தொடக்கத்தில் கிலோவிற்கு 37,200 ரூபாயாக இருந்தது. தற்போது 34,300 ரூபாயாக குறைந்துள்ளது.
இதுபோன்று தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிக ஏற்றத்தாழ்வுகளால் முதலீட்டு தேவை குறைக்கிறது. தவிர பருவ மழை குறைவு காரணமாக கிராமப்புறங்களில் வருமானம் குறைந்ததாலும் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தது.
உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் 25 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி 10 கிராம் தங்கம் 33,790 ரூபாயைத் தொட்டது.
டாலர் மதிப்பிலும் தங்கம் விலை சரிந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 1,300 டாலராக இருந்தது. இப்போது 1,076 டாலராக இருக்கிறது. இந்த ஆண்டின் மத்தியில் ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் 1,046 டாலராக சரிந்தது.
அதேபோல இந்த வருட தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 18.36 டாலராக இருந்தது. ஆனால் வருடத்தின் மத்தியில் 13.88 டாலராக சரிந்தது. அமெரிக்க அரசு வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்தது.
அடுத்த வருடம் அமெரிக்காவில் தேர்தல் நடக்க இருக்கிறது, சீனா வின் பொருளாதார பிரச்சினைகள் தொடர்கிறது, ஐரோப்பாவில் பொதுவாக்கெடுப்பு நடப்பது ஆகிய காரணங்களால் அடுத்த வருடமும் தங்கத்தின் விலை சரிய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்..