இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலை இருக்கிறது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அதிகரித்துள்ள நிதி சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கரோனா இரண்டாவது அலை காரணமாக அதிகரித்துள்ள நிதி சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:
கரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இரண்டாவது அலை, முதல் அலையை விட ஆபத்தானது. முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டது. நல்ல பருவமழை காரணமாக கிராமங்களில் தேவை அதிகரிக்கும்.
கடந்த நிதியாண்டின் இறுதியான மார்ச் 31-ம் தேதி வரை இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 588 பில்லியன் டாலராக இருந்தது. இது உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.
இந்தியா இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கமான மழைக்காலம் உணவு விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். கரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவில் கரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கு தேவையான நிதி வசதிகளுக்காக 50,000 கோடி ரூபாய்க்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தடுப்பூசி மற்றும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சாதன விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், நோயியல் பரிசோதனைக் கூடங்கள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கரோனா தடுப்பூசி, கரோனா தொடர்பான மருந்து இறக்குமதியாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் போன்றோர்களுக்கு வங்கிகள் புதிதாக கடன் வழங்கலாம்.
சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கரோனா காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும். தனிநபர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு,குறு தொழில்களுக்களுக்கான கடன் தீர்மான கட்டமைப்பு அறிவிக்கப்படும். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும்.
சிறு நிதி வங்கிகள் ரூ.500 கோடி வரை சொத்து வைத்துள்ள சிறிய நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.