மத்திய அரசு நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) புதிய விதிமுறையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
இந்த பரிசீலனையை அரசு ஏற்றுக் கொண்டால் பங்கு விற்பனை மூலம் அரசுக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் மொத்தம் 30 பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவீத அளவுக்கே உள்ளது. இந்த அளவு 25 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என புதிய விதிமுறை பரிந்துரைத்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு வசம் உள்ள பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அருண் ஜேட்லியை செபி தலைவர் யு.கே. சின்ஹா சந்தித்தபோது இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோல் இந்தியா, செயில், என்ஹெச்பிசி மற்றும் எஸ்ஜேவிஎன் ஆகிய நிறுவனங்களில் அரசின் பங்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது தவிர எம்எம்டிசி, ஹெச்எம்டி, ஹிந்துஸ்தான் காப்பர், நேஷனல் பெர்டிலைசர்ஸ், என்எல்சி, எஸ்டிசி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் உள்ளிட்ட 7 நிறுவனங்களில் அரசின் பங்களிப்பு 90 சதவீத அளவுக்கு உள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் இதேபோல மூன்று ஆண்டு காலக்கெடு 2010-ம் ஆண்டில் அளிக்கப்பட்டது. இதன்படி பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களிலும் அரசு பங்குகளைக் குறைத்துக் கொள்ள கால அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.