தலைமைப் பண்பு குறித்த செய்திகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் போன்றவை வெளிவராத ஊடகங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராள மான விஷயங்கள் அனுதினமும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. நிறுவனப் பணியாளர்களை சரியாக வழிநடத்திச்செல்ல, கடினமான சூழ்நிலைகளை கையாள மற்றும் வாடிக்கையாளர்களுடனான உறவுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் தலைமைப்பண்பிற்கான முக்கியத்துவம் உணரப்படுகின்றது.
நிறுவன முன்னேற்றத்திற்கு மட்டு மல்லாமல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை மேம்பாட்டிற்கும் தலைமைப் பண்பு குறித்த திறன்கள் மிகவும் அவசியமே.
தலைமைப்பண்பு குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், நடைமுறை சார்ந்து அதன் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும் மற்றும் இவற்றை நமது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தவும் தேவையான வழிகளைச் சொல்கிறார் “பிக்கமிங் தி பெஸ்ட்” என்னும் இந்த புத்தகத்தை எழுதிய “ஹார்ரி எம் ஜென்சென் க்ரேமெர்”.
எங்கிருந்து தொடங்குவது?
உங்களுக்கான இலக்கு ஒன்றை நிர்ணயித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் மேலும், தலைமைப் பண்பிற்கான தகவல்களையும், திறன்களையும் அறிந்துள்ளீர்கள். சரி, உங்களது அடுத்தகட்ட செயல்பாட்டினை எங்கிருந்து எப்படி தொடங்குவது என்ற கேள்வி உங்களுக்குள் எழும் அல்லவா!. இதோ புறப்பட்டுவிட்டேன் என்று, உங்கள் பணியாளர்களிடமோ அல்லது நிறுவனத்தின் வேறு நிலை களிலோ உங்களது தலைமைக்கான திறனை உடனே செயல்படுத்திவிட முடியாது என்கிறார் ஆசிரியர்.
முதலில், உங்களிடமிருந்தே இதற்கான செயல்பாட்டினை தொடங்க வேண்டும். உங்களது சுய அறிவையும், திறனையும் முதலில் உங்களிடமே சோதித்துப்பார்க்க வேண்டும். உங்களை நீங்கள் சரியாக வழிநடத்திச் சென்றால் மட்டுமே, உங்களால் மற்றவர்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல முடியும் என்பதை கொஞ்சம் மனதில் பதியவிடுங்கள்.
சுய பிரதிபலிப்பு!
உங்களது திறனை நீங்களே அறிந்துக்கொள்ளும் இந்த சுய பிரதிபலிப்பின் பயன்களை, வழக்கமான மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின்மூலம் உங்களால் முழுமையாக உணர்ந்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். இதற்காக நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ளும் வகையிலான கேள்விகளையும் கொடுத்துள்ளார். அதாவது, இன்றைய செயலை பற்றிய எனது கருத்து என்ன?, எதைப்பற்றி நான் பெருமைகொள்வது? மற்றும் பெருமைகொள்ளாமல் இருப்பது?, மற்றவர்களை நான் எவ்வாறு பின்தொடர்ந்தேன்? மற்றும் வழிநடத்தினேன்?, இன்றைய எனது செயல்பாட்டினை நான் மேலும் தொடரவேண்டுமா?, அதில் என்னமாதிரியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்?, இன்றைய எனது கற்றல் நாளைய அதிர்ஷ்டத்துக்கு கை கொடுக்குமா?, அடுத்து நான் எவ்வாறு செயல்பட வேண்டும்? போன்ற கேள்விகள் உங்களை உங்களுக்கு உணரச்செய்யும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது. இந்த சுய பிரதிபலிப்பு பயிற்சியானது, அன்றைய நாளின் முடிவில் ஏதேனும் தனிப்பட்ட நேரத்தில் செய்துபார்ப்பதாக இருக்கலாம்.
ஆரோக்கியமற்றதை நீக்குங்கள்!
நம் ஒவ்வொருவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்க்கும் விஷயங்களாக கவலை, பயம், பதட்டம், நெருக்கடி மற்றும் மன அழுத்தம் ஆகியவை பார்க்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட நம்மில் அனைவருமே இந்த எதிர்மறை உணர்வுகளை வாழ்வில் எதிர்கொள்ள விரும்பமாட்டோம் அல்லவா!. முதலில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம், இந்த எதிர்மறை உணர்வுகள் அனைத்தும் எந்தவித பலனையும் அளிக்காத மற்றும் ஆரோக்கிய மற்றவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, இவை அனைத்தும் நமக்கு நேரக்கூடிய சூழ்நிலையினை சரியாக அறிந்துக்கொள்வது அவசியம். நமக்கான பிரச்சினைகள் வரும்போதோ அல்லது நமது செயல்பாடுகள் சரியான பாதையில் செல்லாதபோதோ அல்லது நெருக்கடியான நேரங்களிலோ இந்த எதிர்மறை உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன.
இந்த சமயங்களில், ஏன்? என்ற கேள்வியினை உடனடியாக நாம் நமக்குள்ளே கேட்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேலும், இதற்கான பதிலே நம்மை இந்த இடரிலிருந்து பாதுகாக்கும் என்கிறார். நம்மால் எடுக்கப்பட்ட ஒரு முடிவோ அல்லது அதற்கான காலநேரமோ அல்லது நமது தவறான தேர்வோ இதற்கு காரணமாக இருக்கலாம். நமக்குள்ளே கேட்கப்படும் கேள்வியின் மூலமே இவற்றை சரியாக கண்டறிந்து, அவற்றை நீக்க முடியும்.
சிறந்த குழு!
என்னதான் நாம் நமது தனிப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொண் டாலும், நமது வெற்றியிலும் நமது நிறுவனத்தின் வெற்றியிலும் குழு செயல்பாடானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக, ஒரு செயல்பாட்டிற்கான குழுவின் உருவாக்கத்தின்போது, அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு அவர்களது குறிப்பிட்ட செயலானது எவ்வாறு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கின்றது என்பது பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. அவர்களை பொருத்தவரை, ஒன்றாக ஒரே நிறுவனத்தில் பணி செய்கிறோம் அவ்வளவுதான்.
நிறுவனத்தின் இலக்கினையும், அவர்களது பணி யினையும் பெரிதாக அவர்கள் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை என்கிறார் ஆசிரியர். மேலும், இது ஒருபோதும் சிறந்த அணியாக இருக்க முடியாது என்கிறார்.
குழுவில் உள்ள அனைவருக்குமே தனிப்பட்ட சுயபிரதிபலிப்பு மற்றும் முழுமையான புரிதல் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று. மேலும், நாம் அனைவரும் பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்ற எண்ணம் குழுவினருக்கு ஏற்பட வேண்டும். இந்த எண்ணமே அவர்களின் செயலையும், குழுவின் ஒட்டுமொத்த செயலையும் நிறுவனத்தின் வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும். மேலும், இந்த எண்ணங்களை கொண்டுள்ளவர்களை உள்ளடக்கிய குழுவே மிகச்சிறந்த குழுவாக இருக்க முடியும்.
சிறந்த கூட்டணி!
சிறந்த குழுவும், அதன் வெற்றி கரமான செயல்பாடும் மட்டுமே நிறுவனத்தின் வெற்றிக்கு போதுமானதா என்றால் கண்டிப்பாக இல்லை. இவை நிறுவனத்தின் உட்புற வெற்றிக்கு மட்டுமே உதவிகரமாக அமையும். தலைமைக்கான தனிப்பட்ட திறன் மற்றும் மிகச்சிறந்த குழு ஆகிவற்றிற்கு அடுத்தபடியாக மூலப்பொருட்களை வழங்குவோர், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர் சேவை அளிப்போர் மற்றும் நிறுவன செயல்பாட்டில் வெளியிலிருந்து பங்கேற்கும் மற்றவர்களும் நிறுவ னத்தின் வெற்றியில் அதிக பங்கினை உடையவர்களே.
நீண்ட காலத்துக்கு இவர்களுடனான நிறுவனத்தின் உறவுமுறை வெற்றி கரமானதாக அமையுமாறு கொள்கை களை ஏற்படுத்திக்கொள்வது அவசிய மானது.
நிறுவன குழுவினரை போலவே, இவர்களுக்கும் நிறுவனத்தின் மதிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றை எடுத்துரைத்து, அவர்களும் நிறுவன வெற்றியில் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்த வேண்டும்.
இவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான பரஸ்பர புரிதலும், வெற்றியும் இருக்கும் வகையிலான கூட்டணியை ஏற்படுத்தவும் அதனை தொடர்ந்து வெற்றிகரமாக இலக்கினை நோக்கி கொண்டுசெல்லவும் வேண்டும்.
வாடிக்கையாளர்கள்!
பொதுவாக நிறுவனங்கள் இரண்டு வகையான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். முதலாவது, பரிவர்த்தனை ரீதியிலான வாடிக்கை யாளர்கள். இவர்கள் பெரும்பாலும் பொருட்கள் அல்லது சேவையின் விலையினை அடிப்படையாக கொண்டவர்கள்.
இரண்டாவது, நிறுவனத்தின் பாரம்பரிய வாடிக்கையாளர்கள். இருவருமே நிறுவனத்தின் பொருட் களையோ அல்லது சேவையையோ பயன் படுத்துபவர்களே.
இவர்களுடனான சரியான புரிதலே நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் விரிவுபடுத்தும். மேலும், வாடிக்கையாளர்களுடனான உறவு முறையானது நிறுவன பொருட்களின் மேம்பாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு உறுதுணையாக செயல்படுகின்றது.
இதற்கான மிகச்சிறந்த கட்டமைப் பானது நிறுவனத்தில் இருக்க வேண்டியது அவசியம். வாடிக் கையாளர்களின் தேவை, அவர்களுடனான தொடர்பு மற்றும் குறைபாடுகளுக்கான பதில் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் மூலமே பரிவர்த்தனை ரீதியிலான வாடிக்கையாளர்களையும் நிறுவனத்தின் விசுவாசமான வாடிக் கையாளர்களாக மாற்ற முடியும். மேலும், வாடிக்கையாளர்களும் நிறுவனத்தின் பங்குதாரர்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டியது அவசியம்.
சுய மேம்பாடு முதல் வாடிக்கையாளர் வரையிலான அனைத்து நிறுவன செயல்பாட்டு நிலைகளிலும் தலைமைப் பண்பின் முக்கியத்துவம் இருக்கவே செய்கின்றது.
வலிமையான கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டின் மூலம் தலை மைப்பண்பினை செம்மையாக்கி தனிப்பட்ட வெற்றியினையும், நிறுவ னத்தின் வெற்றியினையும் எட்டிப்பிடிக்க முடியும் என்பதை அறிவோம்.
p.krishnakumar@jsb.ac.in