வணிகம்

ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் முதலீடு

பிடிஐ

தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்ஃபோசிஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 30 லட்சம் டாலரை (சுமார் ரூ.20 கோடி) முதலீடு செய்துள்ளது. விளையாட்டுத் துறையினருக்கான கருவிகளை தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஊப் (whoop)- இல் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கித் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் சாஃப்ட் வேர்களில் ஒன்றான பினக்கிள் சாஃப்ட்வேரை உருவாக்கிய பெருமை இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே சாரும். பெரும்பாலான வங்கிகள் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றன. இது தவிர இந்நிறுவனம் கம்ப்யூட்டர் சார்ந்த சேவைகளை பல நிறுவனங்களுக்கு அளிக்கிறது.

நிறுவனங்களை கையகப்படுத்தி வந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது 2வது முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊப் நிறுவனத்தின் குறைந்த பட்ச பங்குகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு இந்த முதலீடு மூலம் கிடைக்கும். இது 20 சதவீதத்துக்கு அதிகமாக இருக் காது என்று தெரிகிறது.

ஊப் நிறுவனம் விளையாட்டு வீரர்கள் மணிக்கட்டில் அணியும் கருவியைத் தயாரிக்கிறது. இது வீரர்களின் உடல் செயல்பாடு அவர்கள் எந்த அளவுக்கு அதிகபட்ச உடலுழைப்பை அளிக்கின்றனர் என்பதை அளவிட பயன்படும். அத்துடன் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் கணக்கிட உதவுகிறது.

இதன் மூலம் விளையாட்டு வீரர்களும் அவர்களது பயிற்சியா ளர்களும் வீரர்களின் செயல் திறனை கணித்து அதற்கேற்ப பயிற்சி முறைகளை அளிக்க உதவுகிறது. இதற்கான பங்கு பரிவர்த்தனை டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT