வணிகம்

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1.22 லட்சம் கோடி கடன் வழங்க வேண்டும்

செய்திப்பிரிவு

இந்த நிதியாண்டில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கவேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் 70,000 கோடி ரூபாய் கடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் சேர்ந்து 30,000 கோடி ரூபாயும், பிராந்திய கிராம வங்கிகள் 22,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு வைத்துள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து வங்கிகளும் சேர்ந்து 2015-2016-ம் ஆண்டுக்கான கடன் வழங்கும் இலக்காக 1.22 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த நவம்பர் 25-ம் தேதி வரை முத்ரா திட்டத்தின் கீழ் மொத்தம் 45,948.28 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

2015-2016 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக முத்ரா திட்டத்தை உருவாக்கினார். எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் உற்பத்தி, வர்த்தகம், சேவை துறை ஆகியவற்றில் தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் வாங்குவதற்கு தேவையிருந்தால் நேரடியாக வங்கியை அணுகி முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் என்று நிதியமைச்சகம் கூறியுள்ளது.

ஜன்தன் திட்டத்தில் இதுவரை 19.21 கோடி வங்கி கணக்குகளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 26,819 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 2 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்படுகின் றன. 16.51 கோடி நபர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT