வணிகம்

தங்க சேமிப்பு திட்டத்தில் கோயில் தங்கத்தை கொண்டு வருவதில் சிக்கல்?

செய்திப்பிரிவு

அனைத்து பெரிய ஆலயங்களில் உள்ள ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை சேமிப்பு திட்டத்தில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்துவரு கிறது. ஆனால் பக்தர்கள் அளித்த ஆபரணங்களை உருக்குவது மத நம்பிக்கைகளை புண் படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் பல கோயில் நிர்வாகங்கள் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள வளமிக்க ஆலயங்கள் உடனடியாக இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியாது என்றும், இன்னும் சில ஆலயங்களின் நிர்வாகம் இதுவரை இறுதி முடிவு எடுக்க வில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கோயில்கள் இந்த திட்டத்துக்கு ஆர்வம் காண்பித்தாலும், தங்கத்தை உருக்குவதால் ஏற் படும் இழப்பு, ஆபரணங்கள் பக்தர்களால் வழங்கப்பட்டதால் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் என்பது போன்ற பிரச்சினைகளை பற்றி யோசித்துவருகிறார்கள்.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது தங்க சேமிப்பு திட்டம். வீடுகளிலும், கோயில்களிலும் பயனற்ற வகையில் இருக்கிற 22,000 டன் மதிப்புள்ள தங்கத்தை இந்த திட்டத்தினுள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த தங்கத்திற்கு வட்டியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த தங்கத்தை முதலில் உருக்கி பின்பு அதன் தூய்மை தன்மையை கணக்கிட்ட பிறகு மதிப்பு வழங்கப்படுகிறது. தங்கத்தை டெபாசிட் செய்பவர்கள், சேமித்த தங்கத்தை பணமாகவோ அல்லது தங்க நாணயங்களாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.

குஜராத்தில் உள்ள அம்பாஜி கோயில் இந்தத் திட்டத்தில் இப்போதைக்கு தங்கத்தை டெபாசிட் செய்ய முடியாது என்று அறிவித்துவிட்டது.

சோம்நாத் ஆலயம் இந்தத் திட்டத்தில் இணைவது பற்றி கோயில் நிர்வாகிகளால் இறுதி முடிவு எடுக்க உள்ளது, மேலும் முன்மொழிதலுக்கும் தயாராகி கொண்டிருக்கிறது.

மும்பை சித்தி விநாயகர் கோயிலும் இந்தத் திட்டத்தில் இணைய இருக்கிறது. இக் கோயிலுக்கு சொந்தமாக 165 கிலோ தங்கம் உள்ளது. ஏற்கனவே 10 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக செல்வமிக்க இந்து கோயிலான திருப்பதி  வெங்கடேஸ்வரா ஆலயத்தை நிர்வகித்து வரும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் மட்ட முதலீட்டு குழு கோயிலுக்கு சொந்த மான தங்கத்தை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து விரைவில் ஆலோசனை செய்ய உள்ளது. கேரளாவில் நிறைய கோயில்கள் தேவஸ்தான கட்டுப் பாட்டில்தான் இருக்கின்றன.

குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் ஆலய தேவஸ் தானத்தை தவிர மற்ற கோயில் நிர்வாகங்களிடம் தங்க சேமிப்பு திட்டத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இல்லை.

இது பற்றி கேரள தேவஸ்தான துறை அமைச்சர் விஎஸ். சிவக்குமார் கூறுகையில், தேவஸ்தான அமைப்புகள் தன்னாட்சி பெற்றவை. முதலீடு செய்யும் விஷயத்தில் அரசாங்கம் வழிகாட்ட முடியாது என்று தெரிவித்தார்.

தேவஸ்தானங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் உள்ளன என்று கேரள மாநில அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT