உருக்கு தொழிலைக் காக்க ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடை வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு தகடுகளுக்குப் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு தகடு களால் உள்நாட்டில் தங்கள் தொழில் நசிந்து வருவதாக இத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிடம் தெரிவித்திருந்தனர். உள்ளூர் தொழிலை காக்கும் நடவடிக்கையாக பொருள் குவிப்பு தடை வரி அதாவது சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு தகடுகளுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது சுருள் உருக்கு தகடுகளுக்கு (ஸ்டீல் காயில்) விதிக்கப்படும் 4 சதவீத இறக்குமதி வரி இனி 57.4 சதவீதமாக இருக்கும். இதேபோல தென்கொரியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு தகடுகளுக்கும் இத்தகைய வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் இறக்குமதி செய்யப்படும் தகடுகளுக்கு 20 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இருப்பினும் இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு தகடுகளின் அளவு குறையவில்லை.
இதனால் மத்திய அரசு நிறுவனமான இந்திய உருக்கு ஆணையம் (செயில்), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. 20 சதவீத சுங்கவரி விதிப்பு தங்களது தொழிலை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்று இவை குறிப்பிட்டிருந்தன. இதையடுத்து இப்போது அரசு பொருள் குவிப்பு தடை வரி விதிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து குவியும் உருக்கு தகடுகள் அளவு இப்போதைய வரி விதிப்பால் குறையும், அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சேஷகிரி ராவ் தெரிவித்துள்ளார்.