நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் பரவல், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடனுக்கான வட்டி வீதம் நிதிக் கொள்கையில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதன்படி வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாகத் தொடர்கிறது. பொருளாதாரம் மந்தமான சூழலை நோக்கிச் சென்றால், அப்போது வட்டி வீதம் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு நடப்பு நிதியாண்டு தொடங்கியபின் முதல் முறையாக மும்பையில் கூடி விவாதித்தது.
தொடர்ந்து 5-வது முறையாக நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்படவில்லை. கடைசியாகக் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் குறைக்கப்பட்டது. அதன்பின் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வங்கிக் கடனுக்கான ரெப்போ ரேட்டை உயர்த்தத் தேவையில்லை. நிதிக்கொள்கைக் குழுவில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
நிதிக் கொள்கையின் முடிவு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என்று நிதிக் கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 சதவீதமாகவே வட்டி வீதம் தொடரும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வட்டி வீதம் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.
வங்கிகளுக்கான இறுதிநிலைக் கடன் வசதி (எம்எஸ்எப்) வட்டி 4.25 சதவீதமாகத் தொடர்கிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதம் 3.35 சதவீதமாகத் தொடர்கிறது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 4 சதவீதம் வரையிலும், அதிகபட்சமாக 6 சதவீதம் வரையிலும் இருக்கலாம் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2 சதவீதம் வரை குறையலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் 5.2 சதவீதமாகவும், ஜனவரி- மார்ச் காலாண்டில் 5 சதவீதமாகவும், நிதியாண்டில் சராசரியாக 4.4 சதவீதமாகவும் இருக்கும்''.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.