வணிகம்

எம்.எஃப் தொழிலில் இருந்து வெளியேறியது ரெலிகர்

செய்திப்பிரிவு

நிதிச் சேவைகளை வழங்கி வரும் ரெலிகர் என்டர்பிரைசஸ் நிறுவனம் மியூச்சுவல் பண்ட் (எம்.எஃப்) தொழிலில் இருந்து வெளியேறியது. தன்னுடைய 51 சதவீத பங்குகளை வெளிநாட்டு கூட்டு நிறுவனமான இன்வெஸ்கோ நிறுவனத்திடம் விற்றுள்ளது.

வெளியேறியதற்கான காரணம் குறித்து முறையாக அறிவிக்கப்பட வில்லை. ஆனால் நிறுவனர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இந்த பங்குகள் விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மியூச்சுவல் பண்ட் துறை கையாளும் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், ரெலிகர் இன்வெஸ்கோ நிறுவ னத்தில் பெரிய மாற்றமும் இல்லை. கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனம் கையாண்ட சொத்துமதிப்பு 21,009 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் 19,518 கோடி ரூபாயாக குறைந்து இப்போது (செப்டம்பர் இறுதியில்) 21,593 கோடி ரூபாயாக இருக்கிறது.

மேலும் இந்த இணைப்பின் மதிப்பு அறிவிக்கப்படவில்லை. ஆனால் 51% பங்குகளை இன்வெஸ்கோ நிறுவனத்திடம் விற்றுவிட்டதால், 100 %பங்குகளும் அந்த நிறுவனத்தின் வசம் உள்ளன. இன்வெஸ்கோ நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ லோ கூறும் போது, நிறுவனத்தின் 100% பங்குகளும் வந்துள்ளதால் இந்தியாவில் எங்களது செயல்பாட்டினை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று கூறினார். இன்வெஸ்கோ நிறுவனம் கடந்த மார்ச் 2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது.

இதுவரை இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இருந்து வெளி நாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்கள்தான் வெளியேறி வந்தன. அந்த பங்குகளை உள்நாட்டு நிறுவனம் வாங்கியது.

ஆனால் இப்போது நிலைமை மாறி உள்நாட்டு நிறுவனம் தன்னுடைய பங்கினை வெளிநாட்டு நிறுவனத்திடம் விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்திய பங்குச்சந் தைகள் உயர்ந்திருந்தாலும், ரெலிகர் என்டர்ரபிரைசஸ் பங்கு 1.81 சதவீதம் சரிந்து 266.30 ரூபாயில் முடிந்தது.

SCROLL FOR NEXT