டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஜேஎல்ஆர் ஜாகுவார் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் இணைந்துள்ளார். 2023-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ள வேணு சீனிவாசன் நிறுவனத்தின் தலைவர் (எமிரேட்டஸ்) பொறுப்புக்கு மாறும் நிலையில், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ரால்ஃப் ஸ்பெத் ஏற்பார் என்று தெரிகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் இலக்கை நோக்கிய பயணத்தை எட்டும் முயற்சியாக ரால்ஃப் ஸ்மித்தை இயக்குநர் குழுவில் சேர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரிப்புகளை சர்வதேச அளவில் பிரபலமாக்கியதன் பின்புலமாக விளங்கியவர் சர் ரால்ஃப் ஸ்பெத். இவர் தற்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் துணைத் தலைவராகவும், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் முதன் முதலில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய ஸ்பெத், வார்விக் உற்பத்திக் குழுமத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் மற்றும் பிரீமியர் ஆட்டோ குழுமத்தில் சேர்ந்தார். பிறகு ரசாயனத்துறையில் சர்வதேச அளவில் பிரபலமான லிண்ட் குழுமத்தில் சேர்ந்து சர்வதேச வர்த்தக பணிகளை மேற்கொண்டார். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அதை சர்வதேச பிராண்டாக்கினார்.
டிவிஎஸ் இயக்குநர் குழுவில் ரால்ஃப் ஸ்பெத் இணைந்துள்ளதை வரவேற்றுள்ள வேணு சீனிவாசன், தொழில்நுட்பத்தில் அவருக்குள்ள அதீத நிபுணத்துவம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
நிறுவனத்தில் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக்குநராக குயோக் மெங் ஜியோங் நியமிக்கப்பட்டுள்ளார். கே 3 வெஞ்சர்ஸ் நிறுவனரான இவர், குயோக் குழும உருவாக்கத்தின் பின்புலமாகத் திகழ்கிறார்.