வணிகம்

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ‘செபி’ கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான `செபி’ பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) நிறுவனங்கள் கடன் சார்ந்த திட்டங்களில் குறிப்பாக கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் செய்யும் முதலீடுகளுக்கு விதிமுறைகளை வகுக்க திட்டமிட்டிருக்கிறது. புதிய விதிமுறைகளின் படி ஒரே கார்ப்பரேட் நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாது.

அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்ட் 190 கோடி ரூபாயை முதலீடு செய்தது. அந்த கடன் கடன் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால், செபி இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது தர மதிப்பீட்டு நிறுவனங்களின் கிரெடிட் ரேட்டிங்கை மட்டுமே நம்ப வேண்டாம், அந்த முதலீட்டின் மீதான் ரிஸ்க் குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ஆலோ சனை வழங்கி இருக்கிறோம் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்திருக்கிறார். இது குறித்து, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது குறித்த வரைவினை விரைவில் வெளியிட இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு கடன் பத்திர வெளியீட்டில் ஒரு மியூச்சுவல் பண்ட் நிறுவனம் அதிகபட்சம் 15 சதவீதம் வரை முதலீடு செய்யலாம். இந்த எல்லையை 10 சதவீதமாக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல ஒரு துறை சார்ந்த கடன் பத்திரங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இப்போது 30 சதவீதம் வரை முதலீடு செய்ய முடியும், இந்த வரம்பினை 25% குறைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எல்லை நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு மாறுபடும். உதாரணத்துக்கு அதிக தரமதிப்பீடு (ஏஏஏ) உள்ள பத்திரங்களில் கூடுதல் முதலீடும், குறைந்த தரமதிப்பீடு உள்ள கடன் பத்திரங்களில் குறைவான முதலீடும் நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு துறையில் 30 சதவீதம் எல்லை என்றால் நாங்கள் 3 துறைகளை மட்டுமே கவனித்து வந்தால் போதும், ஆனால் ஒரு துறையில் 20 சதவீதம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று எல்லையை குறைக்கும் போது நாங்கள் ஐந்து துறைகளை கவனிக்க வேண்டி இருக்கும். ஆனால் அனைத்து துறையிலும் 20 சதவீதம் எங்களால் முதலீடு செய்ய முடியாது. நிதிச்சேவைகள் துறையை தவிர மற்ற துறைகளில் தரமான கடன் பத்திரங்கள் வெளியாவது இல்லை. உற்பத்தி மற்றும் மின் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பணம் திரும்பி வருவதில்லை என்று மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT