வணிகம்

வரி விவகாரத்துக்கு தீர்வு: வர்த்தக அமைச்சரிடம் நோக்கியா நிர்வாகிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

செல்போன் தயாரிக்கும் நோக்கியா நிறுவன நிர்வாகிகள் புதன்கிழமை மத்திய வர்த்தக அமைச்சரை சந்தித்தனர். அப்போது ரூ. 21 ஆயிரம் கோடி வரி விவகாரத்துக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர். நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்போது சென்னையில் உள்ள ஆலையை சேர்க்கவில்லை. வரி விவகாரம் தொடர்பாக சென்னை ஆலை சேர்க்கப்படவில்லை.

நோக்கியா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டிமோ இஹாமுடோலியாவுடன் நிறுவன அதிகாரிகள் அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினர். இந்தியாவில் நோக்கியா நிறுவனங்களில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எனவே தங்கள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவிலேயே செயல்படும் என்றார்.

வரி பாக்கியை செலுத்துவதற்காக சென்னை ஆலையை இந்நிறுவனம் விற்பனை செய்யும் என தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பாக நிறுவன செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில் வரி விவகாரத்துக்கு சமரச தீர்வு காணவே நோக்கியா விரும்புவதாகத் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நோக்கிய இந்தியா மற்றும் நோக்கியா கார்ப்பரேஷன் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ. 21,153 கோடி என வருமான வரித்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்தது.

இத்துடன் தமிழக அரசு ரூ. 2,400 கோடிக்கு வரி பாக்கி தொடர்பான நோட்டீஸை அளித்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் செல்போன்களை ஏற்றுமதி செய்வதாகக் கூறி உள்நாட்டில் அது விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT