இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் பிராந்தியத் தலைவராக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சி.கே.ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரான சுதித்ரா கே.எல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2021-22ஆம் ஆண்டுக்கான இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தென் பிராந்திய உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.
ஏற்கெனவே துணைத் தலைவர் பொறுப்பு வகித்த சி.கே.ரங்கநாதன் தற்போது தலைவர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2009-10ஆம் ஆண்டில் சிஐஐயின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் (எப்எம்சிஜி) தயாரிப்பு நிறுவனமான கெவின்கேர் நிறுவனம் அழகு சாதனப் பொருள்கள், உணவு, பால் சார்ந்த பொருள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
சிஐஐயில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர் சுசித்ரா. இவர் ஏற்கெனவே ஆந்திரப் பிரதேச சிஐஐ பிரிவின் தலைவர் பதவியை 2012-13ஆம் ஆண்டில் வகித்தவர். பாரத் பயோடெக் நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்நிறுவனம் 120க்கும் அதிகமான காப்புரிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிறுவனம் 100 நாடுகளுக்கு 350 கோடி குப்பி தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.