சென்னையில் உள்ள பிராக்கர் ஆட்டோமோடிவ் விற்பனையகத்தில் வோல்வோ எஸ்60 மாடல் காரை அறிமுகம் செய்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் பிரம்ப் (இடது). உடன் வோல்வோ தமிழ்நாடு பிரிவு இயக்குநர் விஷ்ணுவர்தன். 
வணிகம்

இந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும் என்று சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிறுவனத்தின் புதிய விற்பனையகத் திறப்பு விழாவில் பங்கேற்ற வோல்வோ நிறுவன நிர்வாக இயக்குநர் சார்லஸ் பிரம்ப், உலக அளவில் தங்களது பேட்டரி கார் விற்பனை 50 சதவீத அளவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவில் இது 80 சதவீத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் சொகுசு கார்களுக்கான வரி விதிப்பு (செஸ் மற்றும் ஆடம்பர வரி) இந்தியாவில் அதிகம். ஆனால் இது 45 சதவீத அளவுக்கு பேட்டரி கார்களுக்கு கிடையாது. இதனால் சொகுசு கார்களை வாங்குவோர் பேட்டரி கார்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு இங்கு பிரகாசமாக உள்ளது என்றார்.

பேட்டரி வாகனங்களுக்கான சலுகை தொடர்பாக மத்திய அரசு தற்போது பின்பற்றும் கொள்கையைத் தொடர வேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரி வாகனத் தயாரிப்புக்கு அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என்றார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வால்வோ நிறுவனம் புதிதாக பேட்டரி கார்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்ய முடிவு செய்து முதல் கட்டமாக எக்ஸ்சி 40 மாடலை அறிமுகம் செய்துள்ளது. பேட்டரியில் ஓடும் எஸ்யுவி மாடலாக வந்துள்ள இந்த கார் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர எக்ஸ்சி 60 மாடலுக்கான (விலை ரூ. 45.90 லட்சம்) முன்பதிவை வோல்வோ தொடங்கியுள்ளது. இந்த மாடல் கார்கள் அடுத்த மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படும் என்றார்.

பெட்ரோலில் இயங்கும் எக்ஸ்சி 60 மற்றும் எக்ஸ்சி90 மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT