வணிகம்

தங்க இறக்குமதிக்கு வரியை குறைக்க வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரை

செய்திப்பிரிவு

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு வரிக் குறைப்பு செய்ய மத்திய நிதி அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் மூலம் ஜெம்ஸ் மற்றும் தங்க ஏற்றுமதி அதிகரிக்க ஊக்குவிக்க முடியும் என்றும் கூறினார்.

தற்போதைய நாள் வரை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்று ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி துறை என்று குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பாக நிதி அமைச்சரிடத்தில் பேச உள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக தங்க இறக்குமதிக்கு வரி குறைப்பு செய்ய அமைச்சகத்திடம் பேச உள்ளதாகக் கூறினார்.

தங்கத்தின் மீதான 10 சதவீத இறக்குமதி வரியால், சர்வதேச சந்தையோடு போட்டி போடுவதில் சிக்கல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறையை பொறுத்து நிதி அமைச்சகம் இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வேலைப்பாடுள்ள கற்கள் மற்றும் ஆபரண தங்க ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 13 சதவீதம் குறைந்து 348 கோடி டாலராக உள்ளது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக இருந்த தங்க இறக்குமதி செப்டம்பர் மற்றும் அக்டோபரில் குறைந்தது.

2013-14 நிதியாண்டில் 1.7 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2014-15 நிதியாண்டில் ஜிடிபியில் 1.3 சதவீதமாக உள்ளது.

நாட்டின் ஓட்டுமொத்த ஏற்றுமதி குறித்து பேசும்போது, மத்திய அரசின் 3 சதவீத வட்டி மானியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரிகள், வட்டி குறைப்பு போன்றவை ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என்றார்.

வர்த்தகத்துறை செயலர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஏற்றுமதியை ஊக்கப்படுத்து வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக அளவில் தங்கத்தை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் ஆபரண தேவைகளில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் முக்கிய பங்காற்றுகிறது.

SCROLL FOR NEXT